Wednesday, September 23, 2009

எனக்குப் போராட்டம் பிடிக்கும்! - தோழர் தியாகு

தோழர் தியாகு குறித்து எனக்கு கல்லூரியில் படிக்கும் பொழுது தெரியவந்தது. அவர் திலீபன் மன்றம், தமிழ்ப் பள்ளி போன்றவை அப்பொழுது தொடங்கினார். அன்று வரை இன்று வரைக்கும் பல்வேறு போராட்டங்களை தோழர் நடத்தி வந்திருக்கிறார். அவரது வாழ்க்கையே ஒரு போராட்டமாகவே இருந்திருக்கிறது.

தோழர் தியாகு, ஆனந்த விகடனில் எழுதியுள்ள கட்டுரையை வாசித்தேன். தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தோற்றுப் போன நிலையில், போராட்டத்தின் அளவுகோள் தான் என்ன ? எந்த போராட்டத்தை மேற்கொள்வது போன்ற குழப்பங்களுக்கு அவரின் கட்டுரையை ஒரு தெளிவினை கொடுக்கிறது.

தொடர்ச்சியாக போராட வேண்டும். அதற்கு அந்த வழி சரியானதோ அதனை பின்பற்ற வேண்டும்.

ஆனந்த விகடன் இதழுக்கு நன்றியுடன், தோழரின் கட்டுரையை இங்கே கொடுக்கிறேன்.

எந்தப் பிரச்னையைக் கையில் எடுத்தாலும் அதன் இலக்கை அடையாமல் விடுவதில்லை தோழர் தியாகு. பிடிவாதமான போராட்டக்காரர். கனமான எழுத்தும் கறார் பேச்சும் இவரின் இயல்பு. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் மூலம் இவர் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் எப்போதும் அதிகார
வர்க்கத்தை அச்சுறுத்துபவை!

''நான் போராடுவதாக நினைக்கவில்லை. என் இயல்பில் நான் இருக்கிறேன். 'போராட்டமே வாழ்க்கையாச்சு நீரோட்டம் போல...' என்ற பாட்டைப் போல என்னுடைய பாடும் ஆகிப்போனதற்குக் காரணம், கோபங்கள்தான். சுதந்திர மனிதனைச் சுண்டவைக்கும் அத்தனை நெருக்கடிகளையும் நான் எதிர்க்கிறேன். அடங்க மறுக்கிறேன். விடுதலை என்ற மாற்றைத் தவிர எந்தச் சமாதானத்தையும் நான் ஏற்கவில்லை. எனவே போராடுகிறேன்.

படிக்கிற காலத்தில் ஏற்பட்டது இந்தக் குணம். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் படித்த காலத்தில் காங்கிரஸ்காரன் நான். காமராஜர் தொடங்கிய தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக் குழுவில் நானும் இருந்தேன். சோசலிஸப் பயிற்சி முகாம் நடத்தி னோம். அப்போது காங்கிரஸில் இருந்த நிலச்சுவான் தார்களான பூண்டி வாண்டையார், மூப்பனார் போன்றவர்களை எதிர்த்து கேள்விகள் கேட்டோம். 'நிலச் சீர்திருத்தம்தான் வந்துவிட்டதே' என்று சி.சுப்பிரமணியம் கேட்டார். 'ஆனால், பினாமிகள் பெயர்களில் நிலங்களை மாற்றித் தப்பிக்கொண்டு விட்டார்களே' என்று நானும் என் தோழன் டி.என்.கோபாலனும் கேட்டோம். வாக்குவாதம் வந்தது. கோபித்துக்கொண்டு வெளியே போய் விட்டார் சி.சுப்பிரமணியம். இதைத் தொடர்ந்து '10 அம்சத் திட்டம்' என்ற புத்தகம் எழுதி வெளி யிட்டேன். இதில் கம்யூனிஸ வாடை அதிகம் வீசுவதாக காமராஜரிடம் புகார் செய்தார்கள்.படித்துப் பார்த்த அவர் 'நான் எழுதியது சரிதான்' என்று தீர்ப்பளித்தார். அடுத்த சில நாட்களில் நடந்த இன்னொரு கூட்டத்தில் துளசி வாண் டையாரை, 'நண்பர் துளசி அவர்களே' என்று அழைத்தேன். இப்படியே அதிக நாட்கள் சண்டை போட முடியவில்லை. காங்கிரஸில் இருந்து விலகி கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஐக்கியமானேன்.

மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் அமைப்பு நிலச் சுவான்தார்களை அழிக்கும் போராட்ட முறையைக் கையில் எடுத்தது. வர்க்க எதிரியை அழித்தொழிக்கும் வேலை எனக்கு தரப்பட்டதால் வீட்டைவிட்டு வெளியேறினேன். கொலை வழக்கில் கைதாகி 1970 செப்டம்பரில் சிறைக்குப் போய்விட்டேன். அதற்கு பிறகுதான் உண்மையான போராட்டங்கள் ஆரம்பமானது. இன்றைக்கு சிறைக் கைதிகள் அனுபவிக்கும் பல்வேறு சலுகைகள் நாங்கள் அந்தக் காலத்தில் போராடி வாங்கியவை. படிக்கப் புத்தகங்கள் கேட்டு, கழிப்பறை வசதி கேட்டு, உணவில் சரியான அளவு வேண்டும் என்று சொல்லி வாரம்தோறும் ஏதாவது போராட்டம் நடத்துவோம். ஏ.ஜி.கஸ்தூரி ரங்கன், கைதிகளுக்காக 'சிறைக் கைதிகள் நல உரிமைச் சங்கம்' ஆரம்பித்தார். ஒரு கட்டு பீடியும், 50 பைசாவும்தான் சந்தா. சிறையில் எனக்கு இது தேவை என்று கோரிக்கைவைக்கலாம். ஆனால், எங்களுக்கு இது வேண்டும் என்று கேட்க முடியாது. ஆனால், அதையும் சர்வசாதாரணமான விஷயமாக மாற்றினோம். 'சுதந்திரத் தாகம்' என்ற கையெழுத்துப் பத்திரிகையும் சிறைக்குள் நடத்தினோம்.

இதன் உச்சகட்டமாக 50 அம்சக் கோரிக்கைகளைத் தயார் செய்து ஒருநாள் காலையில் அனைவர் கையிலும் கொடுத்து வாசிக்கவைத்தோம். அவை டைப் அடிக்கப்பட்ட பிரதிகள். இது எப்படி வந்தது என்று அலறியது சிறை.

சிறைக் கைதி செத்தால் காக்கா செத்தது மாதிரி என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள். ஆனால், கைதி செத்தால் கமிஷன் வரும் என்று தனது போராட்டங்களின் மூலமாக நிரூபித்துக்காட்டினார் என்னுடைய தோழன் லெனின். சிறைக் கைதிகளுக்கு இப்படி எத்தனையோ உரிமைகளை போராடி வாங்கித் தந்த நான் 14 ஆண்டுகள் கழித்து விடுதலை ஆனேன். உள்ளுக்குள் இருக் கும்போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இணைந்துவிட்டேன்.

ஆனால், ஈழத் தமிழர் பிரச்னையை அக்கட்சி சரியாக அணுகவில்லை. அதை என்னால் ஏற்க முடியவில்லை. மார்க்சியத்தின் அடிப்படை விஷயமான தேசிய இனப் பிரச்னையில் கட்சி நழுவி வருவதாக நினைத்தேன். தோழர் சந்துருவும் (இப்போதைய உயர் நீதிமன்ற நீதிபதி) இதே எண்ணத்துடன் கட்சியுடன் முரண் பட்டார். ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சொன்னார்கள். எங்களது வாதங்களை அவரால் மறுக்க முடியவில்லை. அதே சமயம் ஏற்கவும் முடியவில்லை. கடைசியில் வெளி யேறினேன். திலீபன் மன்றம் ஆரம்பித்தேன். 18 ஆண்டுகளாக தமிழ்த் தேசியம், தாய் வழிக் கல்வி, தனித் தமிழீழம், மனித உரிமை எனப் பல்வேறு நோக்கங்களுக்காகப் போராடி வருகிறேன்.

எதை எடுத்தாலும் எதிர்ப்பவர்கள் என்று போராட்டக்காரர்களைக் கொச்சைப்படுத்துவார்கள். 'இவங்களுக்கு வேற வேலை இல்லைப்பா. சும்மா சும்மா கோஷம் போடுவாங்க' என்று கிண்டல் அடிப்பார்கள். இவர்களுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் போராட்டங்களை முன்னெடுக்கிறோம். மொழி, பண்பாடு, ஒழுக்கம், அறம் எல்லாவற்றையும்விட முக்கியமானது பணம் என்று இன்று கற்பிக்கப்படுகிறது. போட்டிகள் நிறைந்த உலகத்தில் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக்கொண்ட சுயநல ஊசிகள் தன்னம்பிக்கை உணர்ச்சிகளாக மனித உடல்களில் ஏற்றப்படுகின்றன. லாட்டரியில் பணம் விழுவது சிலருக்குத்தான். ஆனால், லட்சக்கணக்கானவர்களுக்கு லாட்டரி ஆசை திணிக்கப்படுகிறது. சீட்டு விளையாட்டில் வெற்றி பெறுபவன் ஒருவன்தான். ஆனால், பலரும் கடன் வாங்கி பெட் கட்டுகிறார்கள். இப்படிப்பட்ட சூது மனநிலையே இன்றைய தட்பவெப்ப நிலையாக ஆகிவிட்டது. இங்கு போராட்டக்காரர்கள் எப்படி வர முடியும்?

'அக்னிக் குஞ்சொன்று கண்டேன், அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன், வெந்து தணிந்தது காடு; தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ..?' என்று கேட்டவன் பாரதி. அப்படிப்பட்ட அக்னிக் குஞ்சுகள் குறைந்து வருவதற்கு என்ன காரணம்? அதை உருவாக்க வேண்டிய இயக்கங்கள் தங்களது உயிரோட்டங்களைத் தொலைத்துவிட்டதுதான். பொருளாதாரவாதம் பேசிக்கொண்டே தேர்தலைக் குறிவைக்கும் அமைப்புகளாக இடதுசாரிக் கட்சிகள் தேய்ந்துவிட்டன. தலைவர்களை மட்டும் பூஜிக்கும் கட்சியாக தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மாறிவிட்டன. மாற்று அமைப்புகளாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் மார்க்சிய, லெனினியக் குழுக்கள் செயலற்ற தீவிரவாதங்களைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த மூன்றுமே மக்களது போராட்ட உணர்வுகளுக்குத் தூண்டுதலாக இல்லை.

தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்தியம்... இவைஉண்டு, தானுண்டு என்று இருப்பது சுகம்தான். ஆனால், அறம் ஆகாது. அடுத்த வீட்டில் அழுகைச் சத்தம் கேட்கும்போது அது நம்மைப் பாதிக்கவில்லை என்றால், கொஞ்சம் கொஞ்சமாக மரத்துப்போகிறோம் என்று அர்த்தம். 'சொந்தச் சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை கலங்கிலார்' என்று இதைத்தான் சொன்னான் பாரதி. நாளை இது உனக்கே நடக்கும்போது மற்றவர்களும் இப்படித்தான் வேடிக்கை பார்ப்பார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும். போராட்டம் என்பது ஆயுதம் தாங்குவது அல்ல. அனைவரும் ரோட்டில் நிற்பதும் அல்ல. அவரவர் எதிர்ப்பை ஏதாவது ஒரு வகையில் காண்பிப்பது. '30 கோடிப் பேரும் சேர்ந்து மூச்சுவிட்டால் போதும்... அது வெள்ளையனை அவனது நாட்டுக்கு விரட்டிவிடும்' என்று வ.உ.சி. சொன்னது மாதிரி ஏதாவது ஒருவகையில் முடிந்தவரை போராடலாம். 'மக்கள் தங்களது சுதந்திரத்தை வென்றடைய வேண்டும் என்று முடிவெடுத்தால் ஆகாய விமானங்களைக் கல்லெறிந்து வீழ்த்துவார்கள். டாங்கிகளை வெறும் கையால் திருப்புவார்கள்' என்று சொன்னான் ஃபிடெல் காஸ்ட்ரோ.

போராட்டங்கள்தான் எல்லாக் கொடுமைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றன. கோபமான பிள்ளைக்கு சோறு கொஞ்சம் சீக்கிர மாகவே கிடைக்கும்!

வரலாறு இப்படிப்பட்ட போராட்டக்காரர்களுக்கு மட்டுமே சொந்தமானது. அடிமை வாழ்க்கை வாழ்ந்து பழகியவர் குறித்து யாரும் ஆராய்ச்சிகள் செய்வது இல்லை. போராடி வென்றவர் குறித்து எழுதப்பட்ட புத்தகங்களால் நூலகங்கள் நிரம்பி வழிகின்றன. அந்தப் போராட்டக்காரர் வரிசையில் இணைத்துக்கொள்ளவே நானும்போரா டுகிறேன். நிறைய இடங்கள் காலியாக இருக்கின்றன. நீங்களும் வாருங்கள்!''


Monday, September 21, 2009

பூணூல் போடாத பார்ப்பனீயவாதிகள்

பார்ப்பனீயம் என்ற சொல்லாடல் குறிப்பிட்ட ஒரு சாதியினரை மட்டும் குறிப்பதற்காவே வலைப்பதிவு எழுத்தாளர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரையும் படிக்காது, இந்துத்துவாவையும் உணராத அரைவேக்காட்டு விசிலடிச்சான் குஞ்சுகளாகவே பல வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள். அதனால் விளையும் பிரச்சனை என்னவென்றால் நாம் இந்த பார்ப்பனீயம் என்ற சொல்லடாலை கவனமாக பயன்படுத்த வேண்டியுள்ளது. பார்ப்பனீயம் என்றால் உடனே சாதியை சொல்லி திட்டுகிறார்கள் என அழ தொடங்கி விடுகிறார்கள். சாதி ரீதியிலான தாக்குதல்களை நாம் விரும்புவதில்லை. தனிமனித தாக்குதல்களையும் நாம் நிராகரிக்கிறோம். கருத்துக்களை, கருத்து ரீதியிலாக மோதமே நாம் விரும்புகிறோம். ஆனால் அவ்வாறு மோதுவதற்கான இடமாக வலைப்பதிவுகள் இல்லாத பரிதாப சூழலையே நாம் உணர்கிறோம்.

குறிப்பிட்ட சாதியினரை தொடர்ந்து தாக்கி கொண்டிருப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் எந்த நன்மையும் நமக்கு இல்லை. இன்றைக்கு பிராமண சாதியில் பிறக்காமல் பார்ப்பனீயவாதிகளாக திரிந்து கொண்டிருப்போரே அதிகம். உதாரணத்திற்கு நம்முடைய நண்பர் இளா போல. நண்பர் மன்னிக்க வேண்டும். இன்றைக்கு அவரது பதிவு தான் சரியான உதாரணமாக கண்ணில் பட்டது. பொதுவாகவே வலைப்பதிவுகளில் பெரும்பான்மையோர் அத்தகைய நிலையிலேயே உலாவிக் கொண்டிருக்கின்றனர்.

பூணூல் போடாத பார்ப்பனீயவாதிகளான இவர்கள் ஒரு புறம் இருக்க, பிறப்பால் பார்ப்பன சாதியில் பிறந்த பொழுதும் பார்ப்பனீயத்தை கடுமையாக எதிர்க்கும் எத்தனையோ நண்பர்களை சிற்றிதழ் குழுமங்களில் நான் பார்த்து இருக்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தலித், முஸ்லீம் மக்களுக்காகவும் போராடும் இந்த நண்பர்கள் இடதுசாரிக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டவர்கள். மகஇக அமைப்பிலும் பல தோழர்கள் அவ்வாறு உள்ளனர்.

எனவே நாம் எதிர்ப்பது தனிப்பட்ட பிராமண சாதியில் பிறந்தவர்களை அல்ல. பார்ப்பனீய சிந்தனை (Brahmanism) கொண்டவர்களையே நாம் எதிர்க்கிறோம். இந்து சனாதானத்தை நிலை நிறுத்தும் இந்துத்துவா வெறியர்களையும் அடிப்படைவாதிகளையுமே நாம் எதிர்க்கிறோம். அவர்கள் எந்த சாதியை கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களை நாம் எதிர்க்கவே செய்வோம். அந்த வகையிலேயே நாம் கமலின் உன்னைப் போல ஒருவன் படத்தையும் எதிர்க்க முனைகிறோம். அதற்கு வக்காலத்து வாங்கும் இளா போன்ற விவசாய நண்பர்களையும் எதிர்க்கிறோம். நம் விவசாய நண்பரும் ஒரு பார்ப்பனீயவாதியே ஆவார்.

இந்த திரைப்படம் எவ்வாறு முஸ்லீம்களை எதிர்க்கிறது என்பதை நான் விளக்கியிருந்தேன். பெஸ்ட் பேக்கரியில் நடந்த கோரத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் போக்கு பற்றி எழுதியிருந்தது பற்றி எவரிடம் இருந்தும் சரியான விளக்கம் இல்லை. ஆனால் உடனே கமல் பிறப்பால் பிராமணர். எனவே அவரை தாக்குகிறார்கள் என திசை திருப்பும் போக்கில் சிலர் எழுத தொடங்கி விட்டார்கள்.

கமல் பஞ்சதந்திரம் போலவோ, மைக்கேல் மதன காமராஜன் போலவோ படம் எடுத்து இருந்தால், அதில் எத்தனை விதமான பார்ப்பனீயத்தனங்களை புகுத்தி இருந்தாலும் நாம் கேள்வி கேட்க போவதில்லை. ஏனென்றல் அத்தகைய குப்பைகள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. தொலைக்காட்சில் அதை விட மோசமான குப்பைகள் நாம் வீட்டிற்கே தினமும் வந்து சேருகிறது.

ஆனால் சமூக நோக்குள்ள படம், வெகுஜன மக்களின் மனசாட்சி, சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை முன்னிறுத்தும் படம் என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்படும் பொழுது தான் நாம் கேள்வி கேட்க நேரிடுகிறது.

அப்படி கேள்வி கேட்டால் எப்படியான பதில்கள் கிடைக்கும் என்பதற்கு என் கடந்த பதிவுக்கு வந்த மறுமொழிகளும், சுகுணா பதிவுக்கு வந்த மறுமொழிகளுமே சாட்சிகளாக உள்ளது. குறைந்தபட்ச நேர்மையுடன் கூட விவாதிக்க திரணியற்றவர்கள் தான் அனானி தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சிலர் திசைதிருப்பும் போக்குகளில் முயன்று கொண்டிருக்கிறார்கள்.

வலைப்பதிவுகளை பல நண்பர்கள் மாற்று ஊடகம் என்று சொல்கிறார்கள். என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை அந்த நண்பர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

Sunday, September 20, 2009

கமலின் இந்திய தேசிய சாக்கடை : உன்னைப் போல் ஒருவன்

வட இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்க, தமிழகத்திலே மக்கள் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறார்கள் என அங்கலாயிக்கும் இரா.முருகன் என்ற பார்ப்பனீய பண்ணாடையின் வசனத்தில் உருவான இந்த சாக்கடைக்கு தான் பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதி தள்ளுகிறார்கள் நம் தமிழ் வலைப்பதிவர்கள். அப்பட்டமாக முஸ்லீம் எதிர்ப்பு வாதத்தை அடிப்படையாக கொண்ட இந்தப் படத்துக்கு இது வரை சிறு சலசலப்பும் வராமல் இருப்பதே ஆச்சரியமாக உள்ளது. முஸ்லீம் எதிர்ப்ப்பை திறமையாக மறைக்க சாமானிய மக்களின் மனசாட்சியை கொண்டு வருகிறார்களாம். சாமானிய மக்களின் மனசாட்சி தீவிரவாதத்திற்கு எதிராக உள்ளதாம். ஆனால் அந்த தீவிரவாதத்திற்கு ஆணிவேராக இருக்கின்ற இந்திய பார்ப்பனீய வர்க்கம் பற்றி இந்தப் படத்தில் எந்த விமர்சனமும் இல்லை. பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதித் தள்ளுகிற வலைப்பதிவு எழுத்தாள சிங்கங்களுக்கும் எந்த விமர்சனமும் இல்லை.

படத்தின் கதை ஒரு சாமானிய மனிதன் தீவிரவாதத்திற்கு எதிராக கிளம்பி தீவிரவாதிகளை கொல்கிறானாம். ஆனால் தீவிரவாதத்திற்கு எதிராக அவன் கடைப்பிடிப்பதும் தீவிரவாதம். அதையே தானே தீவிரவாதிகளும் செய்கிறார்கள் ? இந்தியா என்ன கைசூப்பிக் கொண்டா உட்கார்ந்து இருக்கிறது. 20,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட இந்த இந்தியா காரணம் தானே ? அதனை எதிர்க்க இந்தியாவை தாக்கினால் தீவிரவாதம். ஆனால் இந்தியா செய்து கொண்டிருப்பது தன்னுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் தந்திரம்.
மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவான மேற்கு வங்க பழங்குடி மக்கள் மீது அரசு தொடுத்த தாக்குதல் அது உள்நாட்டு பாதுகாப்பு. அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் போராடினால் தீவிரவாதம்.

குஜராத்தில் முஸ்லீம் மக்களை கொன்று குவித்த நரேந்திர மோடிக்கு எதிராக முஸ்லீம்கள் போராடினால் தீவிரவாதம். ஆனால் அந்த அரசாங்கம் முஸ்லீம் மக்களை வேட்டையாடினால் - தேசபக்தி, பாதுகாப்பு.

இந்த தத்துவத்தை தான் இந்த மண்ணாங்கட்டி படம் நிலை நிறுத்துகிறது.

இந்தப் படத்தில் வரும் முஸ்லீம் எதிர்ப்பு வாதத்திற்கு ஒரு சாம்பிள்

குஜராத்தில் பெஸ்ட் பேக்கரியில் பல முஸ்லீம்கள் இந்து மத அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டனர். அந்தக் காட்சியை விவரிக்கும் இடம் நகைச்சுவை காட்சியாக படத்தில் சித்தரிக்கப்படுகிறது. முஸ்லீம் தீவிரவாதி சொல்கிறார். அவருக்கு மூன்று மனைவிகள். அதில் மூன்றாவது மனைவி அழகாக இருப்பாராம். அந்த மனைவி பெஸ்ட் பேக்கரியில் கருகி இறந்து விட்டாராம். அதனை அவர் விவரிக்கும் பொழுது மற்றொரு தீவிரவாதியான சந்தானபாரதி ஜோக் அடிப்பார் - அதான் இன்னும் இரண்டு இருக்கே, போததா என ?

அதாவது முஸ்லீம்கள் தங்கள் பிரச்சனையை சொல்லும் இடம் கூட நகைச்சுவையாக மாறி விடுகிறது.

அது போல அப்பட்டமான போலீஸ் வன்முறையை சித்திரிக்கும் இடமாக ஒரு கைதியை சித்திரவதை செய்ய ஒரு போலீஸ் வருகிறார். அதைப் பார்த்தவுடன் அந்தக் கைதி பயத்தில் மூத்திரம் பெய்கிறார். உடனே தியேட்டரில் சிரிப்பு அலை. ஒரு கைதி சித்திரவதை செய்யப்படுவதை கூட நகைச்சுவையாக்கும் செயல்.

துரத்திச் செல்லப்பட்ட மற்றொரு முஸ்லீம் தீவிரவாதி லாரியில் அடிபட, அடி பட்டு உயிருக்கும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் கூட அவனிடம் வாக்குமூலம் வாங்கும் அருவருப்பான காட்சி...

இப்படி படம் முழுக்க அப்பட்டமான மனித உரிமை மீறும் காட்சிகளும், வசனங்களும் படத்தில் நிறைந்து இருக்கின்றன. ஆனால் இங்கு விமர்சனம் எழுதும் தமிழ் வலைப்பதிவு ஜென்மங்களுக்கு இந்த எந்தக் காட்சிகளும் பெரிதாக தெரியவில்லை. படம் எடுக்கப்பட்ட விதத்தை சிலாகித்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

தீவிரவாதிகள் யார் ? அவர்களை உருவாக்குபவர்கள் யார் ?

அவர்களை உருவாக்குபவர்கள் இந்த அரசாங்கம் இல்லாமல் வேறு யார் ? தினந்தோறும் அரசாங்கம் தொடுத்து வரும் வன்முறையை அனுபவிக்கும் ஒருவன் தான் தீவிரவாதியாக உருவாகிறான். குஜராத்திலும், மும்பையிலும், டெல்லியிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லீம் தீவிரவாதிகள் மட்டுமா காரணம் ? அந்த தீவிரவாதத்திற்கு ஆணிவேராக இருப்பது இந்திய பார்ப்பனீய வர்க்கம். தீவிரவாதத்திற்கான காரணத்தை களையாமல் தீவிரவாதிகளை குன்று குவிக்க சிபாரிசு செய்கிறது இந்தப் படம்.

இந்தப் படத்தில் எனக்கு எரிச்சல் ஏற்படுத்திய வசனம் - தமிழர்கள் மும்பை குண்டு வெடிப்பு பற்றி கவலை கொள்ள வில்லையாம். இரா. முருகன் கவலைப்படுகிறார்.

இரா.முருகன் அவர்களே, 25,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்களே அப்ப என்ன சிரைத்து கொண்டிருந்தீர்களா ?