Thursday, December 25, 2008

என் கிறிஸ்துமஸ் மற்றும் சில மத வெறியர்கள்

நான் மதநம்பிக்கை இல்லாதவன். தவிர கிறுத்துவனும் அல்ல. ஆனாலும் எனக்கென்று சில கிறிஸ்துமஸ் நினைவுகள் உண்டு. கிறிஸ்துமஸ் என்றவுடன் என் நினைவுக்கு வருவது வீட்டிற்கு வந்து சில நண்பர்கள் கொடுக்கும் ரூசியான கேக்குகள் தான்.

கிறிஸ்துமஸ் வந்தால் எங்கள் குடும்ப நண்பர் "பாஸ்டர்" பாலசுந்தரம் மாமா வீட்டில் இருந்து கேக் வகையில், பிற இனிப்புகள் எங்கள் வீட்டிற்கு வரும். நாங்களும் தீபாவளி, பொங்கல் சமயங்கள் அவர்கள் வீட்டிற்கு இனிப்புகள் கொண்டு செல்வோம். தவிர விடுமுறை நாட்களில் நாங்கள் அங்கு செல்வதும், அவர்கள் இங்கு வருவதும் வழக்கம்.

பாலசுந்தரம் மாமா சர்ச் ஆப் காட் (Church of God) என்ற பெந்தகோஸ்தே அமைப்பிலே பாஸ்டராக (Pastor) இருந்தார். இங்கிருக்கிற தேவாலயங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிறையப் பணம் வருவதாக ஆர்.எஸ்.எஸ் சொல்லும். ஆனால் தன்னுடைய சொந்த காசிலேயே பாலசுந்தரம் மாமா தேவாலயத்தை நிர்வாகம் செய்து வந்தார். ரோமன் காத்தோலிக்க தேவாலயங்கள் போல வசதியான தேவாலயங்கள் அல்ல பெந்தகோஸ்தே தேவாலயங்கள். குறைந்தபட்சம் பாலசுந்தரம் மாமா இருந்த தேவாலயம் அப்படியானது அல்ல. கீற்று கொட்டகையாகவே இருந்தது. பிறகு ஓடு போட்டார்கள்.

பாலசுந்தரம் மாமாவுக்கு பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் நல்ல வேலை இருந்தது. அதனால் வருமானத்திற்கு பிரச்சனை இல்லை. தேவாலயம், ஏழைகளுக்கு உதவி என நிறைய செய்தார். என் அப்பாவுக்கு கூட சின்ன வயதில் நிறைய உதவி செய்திருக்கிறார். நாங்கள் எப்பொழுதும் அவர் மீது மரியாதை வைத்திருப்போம். எங்கள் மீதும் அவருக்கு பாசம் அதிகம். எங்கள் வளர்ச்சியில் அவருக்கு அதிகம் அக்கறை இருந்தது. நான் அமெரிக்காவுக்கு வருவதற்கு முன்பு அவரிடம் சென்றேன். எனக்காக குடும்பத்துடன் நீண்ட நேரம் ஜபம் செய்தார். ஆனால் அவருடைய மகன்கள் சரியாக படிக்காததில் அவருக்கு வருத்தம் இருந்தது. பிறகு அவர்கள் மொத்த குடும்பமே கிறுத்துவ மத பிரசங்கம் போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது.

பாலசுந்தரம் மாமாவிற்கு புத்தகங்கள் மீது அளவு கடந்த ஈடுபாடு உண்டு. நல்ல ஆங்கில அறிவும் உண்டு. அவருடைய வீட்டிலே பெரிய நூலகம் உண்டு. நான் அவர்கள் வீட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம் புத்தகங்களை கொடுப்பார். நீ நிறைய வாசிக்க வேண்டும் என என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார்.

பாலசுந்தரம் மாமா வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பொழுது அவருடைய ஓய்வுதியத்தை பங்குச் சந்தையிலும், நிதி நிறுவனங்களிலும் போட்டு இருந்தார். சென்னையில் ஒரு காலத்தில் நிதி நிறுவனங்கள் எல்லாம் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடிய பொழுது அவரது பணமும் அதனுடன் போய் விட்டது. அவர் பங்குச் சந்தையில் போட்டிருந்த பணமும் நஷ்டமாகி விட்டது.

என்னுடைய அப்பா அவருடைய நிலை பற்றி மிகவும் கவலைப்பட்டார். உதவிகளையும் பெற்றுக் கொள்கிறவர் அல்ல மாமா. ஆனால் என் அப்பா கவலைப்பட்ட அளவுக்கு கூட பாலசுந்தரம் மாமா அதைப் பற்றி கவலைப்படவில்லை. எல்லாம் கர்த்தர் செயல் என கூறி விட்டார். ஆனாலும் நல்ல நிலையில் இருந்த குடும்பம் கொஞ்சம் நொறுங்கி போய் விட்டது. அவருடைய மகன்களின் சம்பாத்தியம் பெரிய அளவில் இல்லை. ஒரளவுக்கு சுமாராக அவருடைய வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

நான் முதன் முறையாக அமெரிக்கா வந்த பொழுது, நீ எனக்கு ஒரு கீ போர்ட் வாங்கி வர வேண்டும் என கேட்டார். பிரசங்கத்தில் பாடல்கள் பாடுவதற்காக கீ போர்ட் வேண்டும் என்றார். நான் வாங்கிக் கொண்டு சென்றேன். அதைத் தவிர தனிப்பட்ட அளவில் அவர் எதுவும் என்னிடம் கேட்டதில்லை.

எனக்கு மத நம்பிக்கை இல்லை என்பது அவருக்கு தெரியும். பெரியார் பற்றியும் பிற விஷயங்கள் பற்றியும் அவரிடம் பலமாக விவாதிப்பேன். அவரின் கொள்கைகள் கன்சர்வேடிவாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். பல பிரசங்க கூட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்தியிருக்கிறார். ஆனால் அவர் அதனை யார் மீதும் திணிக்க வில்லை. அவருடைய நம்பிக்கையாகவே அது இருந்து விட்டது.

கடந்த முறை விடுமுறைக்கு சென்ற பொழுது பாலசுந்தரம் மாமவிற்கு கிட்னி பாதிக்கப்பட்டிருக்கிறது. டயாலிசிஸ் செய்கிறார்கள். போய் பார்த்து விட்டு, பண உதவி ஏதாவது செய் என்றார். நிறைய பணம் தேவைப்படுகிறது என்றார் அப்பா. பணம் பெற்றுக் கொள்வாரா என கேட்டேன். வாங்கிக் கொள்வார். இப்படி நிறையப்பேர் கொடுப்பதால் தான் அவருடைய சிகிச்சை நடக்கிறது. கொடு என்றார்.

நான் அவருடைய வீட்டிற்கு சென்று கொடுத்த பொழுது பணத்தை வாங்கிக் கொண்டார். பிறகு சொன்னார். என்னிடம் பணமே இல்லை. ஆனால் எப்படி தான் கிடைக்கிறதோ தெரியவில்லை. சரியாக டயாலிஸிஸ் செல்வதற்கு பணம் கிடைத்து விடுகிறது. எல்லாம் கர்த்தரின் செயல் என்றார். நான் மனதுக்குள் "இல்லை மாமா நீங்கள் நிறைய நல்லது செய்து இருக்கிறீர்கள். நல்லவர்களை சம்பாதித்து இருக்கிறீர்கள். அவர்களுக்கு தேவைப்படுகிற நேரத்தில் கொடுத்தீர்கள். அதனால் தான் உங்களுக்கு தேவைப்படுகிற நேரத்தில் பணம் கிடைக்கிறது" என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

விடுமுறை கழிந்து வரும் பொழுது வழக்கம் போல ஜபம் செய்து என்னை வழியனுப்பி வைத்தார். இம் முறை விடுமுறை சென்ற பொழுதும் மாமாவை பார்க்கச் சென்றிருந்தேன். கொஞ்சம் தளர்ந்து போய் இருந்தார். ஆனால் மருத்துவச் செலவை அவர் பணியாற்றிய பொதுத்துறை நிறுவனமே ஏற்று கொண்டிருக்கிறது. அதனால் ஒன்றும் பிரச்சனையில்லை. இனி சமாளித்துக் கொள்வார் என்று அப்பா சென்னார். இப்படியான விஷயங்கள் கர்த்தர் மேலான அவரது நம்பிக்கைகளை அதிகரித்து இருந்தது. எத்தனையோ பிரச்சனைகளுக்கு மத்தியிலும் தனக்கு நடக்கும் இத்தனை நல்ல விஷயங்களுக்கும் காரணம் கர்த்தர் தான் என உறுதியாக நம்பினார்.

மாமாவிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். என்னிடம் பேசுவது அவருக்கு பிடிக்கும். பல உலக நடப்புகளை அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அமெரிக்காவில் தேர்தல் நிலவரம் எப்படி உள்ளது. ஒபாமா வெற்றி பெறுவாரா எனக் கேட்டார். அவர் கருத்தில் கொஞ்சம் கன்சர்வேடிவ் சாயல் இருக்கும். ஆனாலும் ஒபாமா பற்றி எதுவும் அவர் தவறாக கூறவில்லை. இந்தியாவில் இருந்த அடக்குமுறைகள் குறித்த அவர் கருத்து எனக்கு தெரியும். ஒபாமாவை அவர் ஆதரிப்பதாகவே உணர்ந்து கொண்டேன்.

பிறகு வழக்கம் போல விடைபெறும் பொழுது நீண்ட ஜபம் இருந்தார். அடுத்த முறை மாமாவை மறுபடியும் பார்க்க வேண்டும் என்று மட்டும் அப்பொழுது நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். இப்பொழுதும் டயாலிசிஸ் எடுத்துக் கொண்டிருந்தாலும் நலமாக இருக்கிறார்.

இந்த கிறுஸ்துமஸ் பொழுது ஏனோ இந்த ஞாபகங்கள் என் மனதில் வந்தது. மதங்களைச் சார்ந்த நம்பிக்கைகள் மனிதனை பண்படுத்தியிருக்கிறது என்பதை பெரியார் கருத்தில் நம்பிக்கை கொண்ட நானும் பல நேரங்களில் உணர்ந்து இருக்கிறேன். பாலசுந்தரம் மாமாவின் வாழ்க்கை அப்படியான ஒரு கருத்தை என் மனதிலே விதைத்து இருக்கிறது. கமல் நடித்த அன்பே சிவம் படம் போல அன்பும், நேசமும், சகோதரத்துவமும் தான் சிவம், கர்த்தர், புத்தர் என எல்லாமும். மதம் மனிதனை நேசிக்கவே கற்று கொடுக்கிறது. புத்தரும், கர்த்தரும் மதவெறியை எதிர்த்து தங்கள் பிரச்சாரத்தை தொடங்கினார்கள்.

அதிகாரத்தை எதிர்த்து ஒலித்த குரல் யேசுவினுடையது. யேசு சோசலிசத்தை முதலில் முன்வைத்தவர்களில் ஒருவர். அன்பு, சகோதரத்துவம், அதிகாரத்திற்கு எதிரான குரல் போன்றவற்றை பிரதிபலித்தவர் யேசு கிறிஸ்து.

இந்தியாவை திரும்பி பார்க்கும் பொழுது மத தலைமைகள் பிற்போக்குவாதத்தையும், அடிப்படைவாதத்தையும், ஏற்றத்தாழ்வுகளையுமே போதிக்கிறது. அந்த ஏற்றத்தாழ்வுகளை தக்கவைக்க மதக்கலவரங்களை உண்டாக்குகிறது.

மனிதன் அன்பினையே நாடுகிறேன். மனிதனின் உணர்வுகளை தங்கள் அதிகாரத்தை தக்கவைப்பவர்களே தூண்டி விடுகிறார்கள். வெறி கொள்ள வைக்கிறார்கள். எனக்கு கிறிஸ்துமஸ் கேக்குகள் மட்டும் கிடைக்கவில்லை. ரமலான் நோன்பு கஞ்சிகள் நிறைய கிடைத்து இருக்கின்றன. சிறிய வயதில் கிறிஸ்துமஸ், ரமலான் பண்டிகையை கூட அன்று கிடைக்கப்போகிற வித்யாசமான இனிப்புகளுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து இருந்து இருக்கிறேன். அந்த இணக்கத்தை மத வெறியர்கள் கெடுத்து விடக்கூடாது என்பதே என்னுடைய எண்ணம்.

Tuesday, December 23, 2008

சுதந்திரமான எழுத்தின் விலை

வலைப்பதிவுகளில் சனநாயகம், சுதந்திரம் என்ற கூக்குரல்கள் கேட்கின்றன. இக் கூக்குரல் எழுப்பும் பலரும் பகுதி நேர எழுத்தாளர்கள். எழுத்தை தங்கள் வாழ்க்கைத் தேவைக்காக அல்லாமல் எழுத்தை பொழுது போக்குக்காக கையாளுபவர்கள். இவர்களில் எத்தனை பேர் தங்களுடைய முழு நேர வேலையில் சுதந்திரமாக இருக்கிறார்கள். முழுநேர வேலைகளில் முழு சுதந்திரம் எங்கேயும், எப்பொழுதும் கிடைக்காது. நம்முடைய எண்ணத்தை கூட அலுவலக அரசியல்களுக்கும், நம் வாழ்க்கை தேவைக்கும் பலி கொடுக்க வேண்டியுள்ளது. அப்படி இருந்து விட்டு இங்கே சுதந்திரத்திற்காக குரல் எழுப்புகிறார்கள். 

இதை ஏன் சொல்கிறேன் என்றால் சுதந்திரமான எழுத்துக்கும் ஒரு விலை உண்டு. இன்று குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களாக இருக்கும் பலர் எழுத்தினை தங்களின் முழு நேர தொழிலாக கொண்டவர்கள். அவர்கள் ஆரம்பகாலங்களில் எதிர்கொண்ட பிரச்சனைகளை நோக்கினால் வலைப்பதிவுகளில் எழுத்து சுதந்திரம் நிறையவே உள்ளது.

ஒரு முக்கியமான எழுத்தாளர். பல முக்கியமான படைப்புகளை முன்வைத்த படைப்பாளி. எழுத்தினை தன்னுடைய முழு நேர வேலையாக கொண்டவர். எழுதுவதை தவிர அவருக்கு வேறு ஒன்றும் தெரியாது. பத்திரிக்கையில் எழுத வேண்டியவர், தன்னுடைய வயிற்று தேவைக்காக ப்ரூப் ரீடராக வேலைப் பார்த்தார்.

பத்திரிக்கைகளில் தங்கள் படைப்புகள் வந்தால் தான் வீட்டில் சோறு என்ற நிலையில் எத்தனையோ எழுத்தாளர்கள், எழுத்து குறித்து ஒன்றுமே தெரியாத உதவி ஆசிரியர்களின் திருத்தங்களில் தங்கள் எழுத்துக்கள் சிதைந்து போவதை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் சுதந்திரம் பறிபோவதை விரும்பாத சிலர், தங்கள் கொள்கைகளை கட்டிக் கொண்டு வாழ்க்கையில் போராடி போராடியே தோற்று போயிருக்கிறார்கள்.

பத்திரிக்கைகளில் எழுதிய பத்திரிக்கையளாரின் எந்த எழுத்தும் திருத்தம் செய்யாமல் வெளியானதில்லை. பதிப்பகங்களால் வெளியிடப்பட்ட எந்த புத்தகமும் திருத்தங்கள் இல்லாமல் வெளியானதில்லை. சினிமா பாடலாசிரியன் மெட்டுக்கு பாட்டு எழுதுவது போல எழுத்தாளன் துட்டுக்கு எழுத்தினை எழுத வேண்டியது தான்.

இந்த வட்டத்திலே நுழையாமல் சிற்றிதழ்களில் எழுத்தை எழுதி, பிற வேலைகளை தங்கள் வாழ்க்கை தேவைக்காக கொண்டவர்களை நான் அறிவேன். அவர்கள் எழுத்தை காதலிப்பவர்கள். தங்கள் எழுத்து சிதைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொண்டவர்கள்.

அப்படி பலரை பார்த்து விட்டு வலைப்பதிவுக்கு வந்த எனக்கு வருத்தமாக இருக்கிறது. நான் எழுத்தாளன் அல்ல. பெரும்பாலும் வாசகன் மட்டுமே. ஆனால் எழுத்தை மதிப்பவன்.

தமிழ்மணத்திலே எழுத்தினை மதிக்கும் சிலரை மட்டுமே நான் இது வரை பாத்திருக்கிறேன். எழுத்தினை மதித்து அந்த எழுத்துக்கு மரியாதையுடன் எழுதும் எவரும் இங்கு அதிகம் இல்லாதது ஏமாற்றமாக உள்ளது. எழுத்தினை காதலிக்க வேண்டும். அப்படி காதலிப்பவன் மொக்கைகளை எழுத மாட்டான். எழுத்தை நேசிப்பான். அந்த எழுத்துக்கு நியாயம் செய்வான்.

வெறும் பொழுதுபோக்காக எழுதும் பொழுது தான் மொக்கைகளை உண்டாக்க முடியும். தமிழ்மணத்தின் பதிவர்கள் அப்படி பொழுதுபோக்காக எழுதி எழுத்தை கெடுக்கிறார்கள். இதிலே சுதந்திரம் பற்றி பேசுவது தான் கொடுமையாக உள்ளது. பத்திரிக்கை உலகிலும், பதிப்பகங்களிலும் உள்ளது போல இங்கு எந்த எழுத்தும் தணிக்கை செய்யப்படவில்லை. சுதந்திரம் பற்றி பகுதி நேரமாக பேசுபவர்கள் முதலில் தங்கள் முழு நேர வேலையில் சுதந்திரம் பெறட்டும்.

Monday, December 22, 2008

பிரபல பதிவர்களே, ஒப்பாரி வைப்பதை நிறுத்துங்கள்

பிரபல பதிவர்களே, ஒப்பாரி வைப்பதை நிறுத்துங்கள். அசிங்கமாக இருக்கிறது. நீங்கள் எதுவும் எழுதி கிழித்து விட வில்லை. மற்றவர்கள் எதுவும் எழுதாமலும் இல்லை. இங்கு எழுதும் பலரின் பதிவுகள் எத்தனையோ நல்ல தகவல்களை தருகிறது. பலர் ரசிக்கும்படி எழுதுகிறார்கள். நீங்கள் எழுதியது எல்லாம் வெறும் மொக்கைகள். மொக்கைகளும் பதிவுகள் தான். நான் மறுக்கவில்லை. அதே நேரத்தில் நீங்களே உங்கள் "பிரபல" வேடத்தை பயன்படுத்திக் கொள்வதால் மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய கவனிப்பு உங்களுக்கே சென்று விடுகிறது. நல்ல பதிவுகள் மறைந்து விடுகின்றன. தமிழரங்கம் போன்ற தளத்தில் இருந்து வரும் பல நல்ல பதிவுகள் சூடாகாமல் மறைந்து போய் விடுகிறது. தெரு நாய், சொறி நாய் போன்ற பதிவுகள் சூடாகி விடுகிறது. அத்தகைய பதிவுகளை போட்டு விட்டு என் பதிவை தூக்கி விட்டார்கள் என அலறுவது அசிங்கமாக உள்ளது.

அது என்ன பிரபலம் ? பிரபல நடிகர், பிரபல நடிகை, பிரபல தொழில் அதிபர் போல பிரபல பதிவரா ? சகிக்கவில்லை. எழுத்தாளர்களில் கூட சிற்றிதழ் எழுத்தாளர்கள், தலித் எழுத்தாளர்கள், இடதுசாரி எழுத்தாளர்கள், வெகுஜன எழுத்தாளர்கள் என்று தான் சொல்வார்கள். அவர்கள் எழுத்தின் தன்மையை கொண்டே பெயர் வழங்கப்படுகிறது. ஆனால் இங்கே என்னவென்றால் பிரபல எழுத்தாளராம் ? மூத்த பதிவராம் ? சினிமா பாணியில் இருக்கும் இந்த வழக்கம் சகிக்க வில்லை. அசிங்கம்.

நான் சொல்ல வந்தது அவ்வளவு தான்

Sunday, December 14, 2008

கூவம் நதிக்கரை வாசம்

சென்னை சூளைமேடு நமச்சிவாயபுரம் தான் முதன் முதலில் நான் சென்னையில் குடிபுகுந்த இடம். பெட்டிகளுடன் நமச்சிவாயபுரம் வந்து சேர்ந்த பொழுது அந்தளவுக்கு கூவத்துடன் நெருக்கமாக நான் இருப்பேன் என்பது எனக்கு தெரியாது. நண்பன் அறையை கொண்டு வந்து காட்டிய பொழுது ஒரு அருமையான நறுமணம் வீசிக் கொண்டிருந்தது. "என்ன அது நாற்றம் என்றேன் நண்பனிடம். நாற்றம் என்று சொல்லாதே, நல்ல வாசனை என்றான். தினமும் இங்கே தான் இருக்கப் போகிறோம், பழகி விடும் என்றான். சில நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் சென்னையின் போக்குவரத்து புகைமண்டலம் என்னவோ செய்தது. அங்கே இருக்கத் தான் வேண்டும். வேறு வழியில்லை. சென்னையில் எனக்கு வேறு நண்பர்கள் இல்லை. வேலை தேடியாக வேண்டும். வேலை தேட சென்னையை விட சிறந்த இடம் தமிழ்நாட்டில் வேறு இல்லையே ? சில நாட்களில் சரியாகி விட்டது. அல்லது பழகி விட்டது.

சென்னை நமச்சிவாயபுரத்தில் இருக்கும் பொழுது சென்னையில் இருக்கிறோமா என்று தெரியாது. கிராமத்தில் இருப்பது போலவே இருக்கும். கிழக்கு நமச்சிவாயபுரம், மேற்கு நமச்சிவாயபுரம் என இரண்டு பகுதிகள் உள்ளது. கிழக்கு நமச்சிவாயபுரம் குடிசைப் பகுதி, மேற்கு நமச்சிவாயபுரம் கட்டிடங்களுடன் இருக்கும். நான் இங்கே தான் இருந்தேன். நமச்சிவாயபுரத்தை ஒட்டி தான் கூவம் ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. கூவத்திற்கு அடுத்தாற் போல குடிசைப் பகுதிகள். அதை தாண்டினால் பச்சையப்பா கல்லூரி, அமைந்தகரை (சென்னை தமிழில் அம்ஜிகரை) போன்ற பகுதிகள்.

என்னுடைய அறை கிட்டத்தட்ட கூவம் நதிக்கரை வாசம் தான். என் அறைக்கும், கூவம் நதிக்கரைக்கும் இடையில் மற்றொரு தெரு உண்டு. காலையில் எழுந்து நான் தங்கியிருந்த வீட்டின் பால்கணிக்கு வந்தால் கூவம் நதி தெரியும். நல்ல கறுப்பு நிறத்தில் கூவம் ஆறு ஓடும் அழகே தனி தான். காலையில் எழுந்தால் இந்தப் பக்கம் கூவம் ஆறு என்றால் எதிர்பக்கத்தில் அழகான ஒரு தாவணி. அவர் பெயர் நினைவில் இல்லை. முஸ்லீம் பெண். நல்ல அழகாக இருப்பார். அவரை நான் தங்கியிருந்த விடுதியின் அத்தனை பேரும் பார்த்து கொண்டிருப்பர். சிலர் இங்கிருந்து சாடை காட்டுவார்கள். அவர் பலருக்கு பழிப்பு காட்டுவார். சில நேரம் சிரிப்பார். நாம் நாகரிகமாக நடந்து கொண்டால் சைகையில் நாகரிகமாகவே பதில் வரும் என்பது என் அனுபவம். அநாகரிகமாக நடந்து கொண்ட சிலருக்கு செருப்பு எடுத்துக் காட்டியிருக்கார். ஒருவரை நோக்கி செருப்பை வீசியிருக்கிறார். ஆனால் அவர் நாங்கள் செய்த சேட்டைகளை விரும்பினார். எதையும் அவர்கள் வீட்டில் கூறியது இல்லை. அவருக்கும் வீட்டில் பொழுது போக வேண்டும் அல்லவா ? மிக நல்ல பெண். நான் அங்கிருந்த பொழுதே அவருக்கு திருமணம் நடந்தது. இங்கிருந்து திருமணம் ஆகப் போகிறதா என்று சைகையில் கேட்ட பொழுது ஆம் என்று சிரித்தார். பிறகு காணாமல் போய் விட்டார். இந்த விடுதியில் இருந்த பெரும்பாலானோர் அவருக்கு சைகை காட்டியிருக்கிறார்கள். ஆனால் அவரிடம் யாரும் பேச முயற்சிக்க வில்லை. அவர் பெரும்பாலும் தன்னுடைய பாதுகாப்பு படைகளுடனே வெளியே வருவது காரணமாக இருந்திருக்கும்.

நான் இருந்தது மேன்ஷன் போன்ற அமைப்பு. ஆனால் மேன்ஷன் இல்லை. மூன்று மாடி. ஒவ்வொரு மாடியிலும் நான்கு அறைகள். எல்லா அறைகளிலும் பேச்சிலர்கள் தான். பலர் பலவிதமான வேலைகளில் இருந்தனர். நாங்கள் எங்கள் கல்லூரி தோழர்கள் அனைவரும் ஒரு அறையில் இருந்தோம். அனைவருமே சாப்ட்வேர் வேலைக்கு தான் முயற்சி செய்து கொண்டிருந்தோம். பி.இ. முடித்தவன் எல்லாம் சாப்ட்வேருக்கு தானே போக வேண்டியிருக்கிறது. அந்த அறையில் மொத்தம் இருக்க வேண்டியவர்கள் 4 பேர் தான். ஆனால் ஐந்தாவது ஆளாக நான் இருந்தேன். இது தவிர இரவு சினிமாவுக்கு சென்று விட்டு இன்னும் சில நண்பர்களும் எங்களுடன் படுத்துக் கொள்வர். அந்த சின்ன அறையில் பத்து பேர் வரை படுத்திருக்கிறோம். இன்றைக்கு முடியுமா என தெரியவில்லை. பெட் இல்லாவிட்டால் முதுகு வலிக்கிறது. கட்டிடத்தின் உரிமையாளர் அவ்வப்பொழுது வருவது வழக்கம். அவர் வரும் நேரத்தில் ரகளை நடக்கும். ஒவ்வொரு அறையிலும் நிறையப்பேர் இருப்பார்கள். பெரும்பாலும் ஞாயிறு காலையில் தான் அவர் வருவார். அவர் வரும் பொழுது நழுவி வெளியே ஓட வேண்டி வரும்.

சூளைமேடு வாழ்க்கையில் குடிசை வாழ்க்கையின் அனுபவங்களையும், ஒண்டிக்குடித்தனங்களின் சண்டைகளையும் நிறைய பார்த்திருக்கிறேன். காலையில் வரும் மெட்ரோ லாரி தண்ணீருக்காக நடக்கும் சண்டையே தனி தான். க்ளோரின் வாசனையுடன் இன்றைக்கு அந்த தண்ணீரை குடிக்க நிறைய யோசிப்பேன். ஆனால் அன்றைக்கு பையில் இருந்த பணத்திற்கு அதுவே தேங்காய் தண்ணீர் போலத்தான் இருந்தது. நடக்கும் சண்டையின் வசவுகளை பல நேரங்கள் கேட்டுக் கொண்டிருப்பேன். அந்த வசவுகளுக்கு இலக்கணம் வைத்து பார்த்தால் தமிழன் காமத்தில் எவ்வளவு கரைதேர்ந்தவன் என்பதும், மிடில்க்ளாஸ் வாழ்க்கையில் நாகரிகமாக எத்தனை அசிங்கங்களை மறைத்துக் கொண்டிருக்கிறான் என்பதும் தெரியும்.

என் பக்கத்து அறையில் ஒரு நண்பன் இருந்தான். அவன் பெயர் நினைவில் இல்லை. மன்மதன் என்றால் அவன் தான். ஒரு நாள் மதியம் என்னுடைய அறையில் இருந்து சாதாரணமாக ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த பொழுது யாருக்கோ அவன் சைகை காட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. எனக்கு அப்பொழுது வேலையில்லை. வேலையில்லாவிட்டால் வேறு என்ன செய்வது. அவன் யாருக்கு சைகை காட்டுகிறான் என நோட்டம் விட்டேன். அங்கே இருந்தவரை பார்த்த பொழுது திக் என்றது. அவர் அதே தெருவில் உள்ள ஒரு குடும்பத்தலைவி. பல கதைகள் பிறகு கேள்விபட்டேன்.

கூவம் நதிக்கரையில் நான் ரசித்த மற்றொரு விஷயம் கானா பாடல்கள். முக்கிய விழாக்களில் கானா பாடல் கச்சேரிகளை வைப்பார்கள். கூவம் நதிக்கரை கண்ணெடுத்த சொத்து இந்த கானாபாடல்கள். இந்த கானா பாடல்கள் முன்வைக்கும் விஷயங்களை கூட நம் சினிமா பாடல் கவிஞர்கள் முன்வைக்காமல் போய் விடுவார்கள். இப்பொழுது கூட கானா உலகநாதனின் கானாபாடல்களை அவ்வப்பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் (கலைஞர் தொலைக்காட்சியில்) பார்த்து மகிழ்கிறேன்.

சென்னை செகுசு பகுதியில் குடிக்க தண்ணீர் இல்லாத காலத்தில் கூட கூவம் நதிக்கரையில் நல்ல தண்ணீர் குளிக்க (குடிக்க அல்ல) கிடைத்தது மிகப் பெரிய ஆச்சரியம். உப்பு தண்ணீர் தான். ஆனால் நான் அங்கே இருந்த மூன்று ஆண்டுகளில் ஒரு முறை கூட தண்ணீர் பஞ்சம் வந்தது இல்லை. குடிக்க கூட மினரல் வாட்டர் வாங்கி விடலாம். குளிக்க தண்ணீர் இல்லையென்றால் என்ன செய்வது ?

கூவம் நதிக்கரை இன்னும் பல அனுபவங்களைக் கொடுத்தது. நாங்கள் இரவு நேரங்களில் அறைக் கதவை திறந்து வைத்து விட்டே படுப்பது வழக்கம். நம்மிடம் என்ன இருக்கிறது எடுத்துப் போக என்ற அலட்சியம் தான். ஆனால் அதற்கு வந்தது ஆப்பு. ஒரு நாள் காலை எழுந்து பார்த்த பொழுது அறையில் இருந்த சில பொருட்கள் மிஸ்ஸிங். என்னடா இது என்று பார்த்தால், ஒரு நண்பனின் பாஸ்போர்ட் இருந்த பை காணாமல் போய் விட்டது. துணிப்பையுடன் சேர்த்து பாஸ்போர்ட் இருந்ததாக கூறினான். அலற ஆரம்பித்து விட்டான். அவன் TCS நிறுவனத்தில் பணிபுரிகிறான். ஆன்சைட்(Onsite) வாய்ப்பிற்காக காத்திருந்தவன். போலீஸ் ஸ்டேஷன் போய் ஒரு புகார் கொடுத்திடலாம் என்று கிளம்பினோம். என்னை துணைக்கு அழைத்துக் கொண்டான். இது வரைக்கும் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் போனதே இல்லை. நாங்கள் போனவுடன் அவன் பதட்டத்துடன் என் அறையில் திருட்டு, பாஸ்போர்ட் காணவில்லை. எப்.ஐ.ஆர் போடணும் என்றான். போலீஸ்காரருக்கு குஷியாகி விட்டது. பாஸ்போர்ட் காணவில்லை, எப்.ஐ.ஆர் என்றவுடன் அவருக்கு பணம் கறக்கும் எண்ணம் தோன்றி விட்டது. எங்களை உட்கார வைத்து நிதானமாக பேசினார். பேச்சு திருட்டு பற்றியே இல்லை. என்ன திருட்டு, எப்படி நடந்தது என எதைப் பற்றியும் இல்லை.

TCSல் வேலை பார்க்கும் நீ, எதற்கு நம்ச்சிவாயபுரத்தில் இருக்கிறாய் என்றார் ? வேலை கிடைப்பதற்கு முன்பு இருந்தே இருக்கிறோம். சிலருக்கு இன்னும் வேலை கிடைக்க வில்லை. ரொம்ப நாளாக இருந்ததால் அப்படியே இருந்து வருகிறோம் என்றோம். நமச்சிவாயபுரத்தில் இருப்பவன் பெரும்பாலும் நமச்சிவாயபுரத்திலேயே மருமகனாகி விடுவான், பார்த்து இருங்கள் என்றார். அவர் கூறியதன் அர்த்தம் அப்பொழுது புரியவில்லை. சில கதைகளை பக்கத்து அறை நண்பர்கள் சென்ன பொழுது தான் புரிந்தது.

கூவம் நதிக்கரை எனக்கு பல அனுபவங்களை கொடுத்தது. இன்று நியூயார்க் நகரில் இருந்தாலும், நீல வண்ணத்துடன் ஓடும் அழகான பல நதிகளை பார்த்தாலும் கூவம் நதிக்கரையும், அதன் வாசனையும், அதன் மக்களும், அந்த நினைவுகளும் எல்லாவற்றையும் விட அதிகளவில் மனதில் நிற்கிறது. பல சமூக அனுபவங்களை, புரிதல்களை எனக்கு வளர்த்துள்ளது. அந்த மனிதர்களிடம் இருக்ககூடிய முரண்பாடுகள், சண்டைகள், சச்சரவுகள், அடிதடிகள் போன்றவை எங்கேயும் காணக்கிடைக்காதவை. மிகவும் தனித்துவமானது. ஒரு புதினத்தை அந்த மக்களின் வாழ்க்கையை வைத்து அழகாக எழுதி விட முடியும். எந்த சினிமாவும் இவர்களின் வாழ்க்கையின் முரண்பாடுகளை இது வரை காட்டவில்லை. மேல்வர்க்கத்தை சினிமா படம் பிடிக்கும் அளவுக்கு இந்த மக்களை தமிழ் சினிமா அணுகவில்லை. இவர்களை கலர்புல்லாக காட்டமுடியாதது தான் காரணமாக இருக்கும். கலர்புல்லாக இல்லாதது தமிழ் சினிமாவாக முடியாதே ?

Friday, December 12, 2008

மொக்கை பதிவு போடுபவர் எல்லாம் மூத்த பதிவரா ?

தினமும் ஒரு மொக்கை பதிவை ஒரு வருடம் தொடர்ந்து போட்டால் அவர் மூத்த பதிவரா ? வலைப்பதிவின் இந்த இலக்கணம் புதியதாக வலைப்பதிவிற்கு வந்திருக்கும் எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.

வலைப்பதிவு தான் எனக்கு புதிது. எழுத்து எனக்கு புதிது அல்ல. சிற்றிதழ்களின் வாசிப்பில் வளர்ந்தவன். அங்கிருக்கும் சச்சரவுகளைக் கண்டவன். நண்பர்கள் மூலமாக வலைப்பதிவு அறிமுகமாகி இங்கே சில காலமாக கவனித்து இப்பொழுது பதிவையும் தொடங்கியிருக்கிறேன்.

சிலர் மூத்தப் பதிவராம். அவர்கள் அடித்துக் கொள்ளும் தெருச்சண்டைக்காக ஒரு புதிய பதிவர் அவர்களை ரிடையர் ஆக சொல்கிறாரம். மூத்தப் பதிவர் ஆசனத்திற்கு இங்கே அவசியம் என்ன ? எல்லோரும் பதிவர்களே. இந்த ஆசனங்களை கொடுத்து சிலருடைய பிம்பங்களை வளர்க்க வேண்டாம்.

மூத்த பதிவர்கள் என்ன தான் எழுதியிருக்கிறார்கள் என பார்த்தால் ஒரு நண்பர் தினம் ஒரு மொக்கையாக போட்டுக் கொண்டிருக்கிறார். சுவீடன் பெண் தொடங்கி பனி வரை மொக்கை மயம். கிளிநொச்சியில் சண்டை நடந்து கொண்டிருக்க, அதை வைத்தும் அந்த நண்பர் மொக்கை போட்டிருக்கிறார். அது அவருடைய எழுத்து உரிமை. நாம் அதை விமர்சிக்க தேவையில்லை. ஆனால் ஒரு வருடம் வலைப்பதிவில் இயங்குவதால் அவருக்கு எந்த தனி ஆசனமும் கொடுக்க தேவையில்லை. நம் பக்கத்து இருக்கையில் அவரையும் அமர வைப்போம்.

செந்தழல் ரவி, லக்கிலுக், பெயரிலி, குழலி, கோவி.கண்ணன், டோண்டு, மோகன் கந்தசாமி போன்ற பதிவர்கள் எனக்கு இந்த சண்டை மூலம் அறிமுகம் ஆனார்கள். இவர்களில் லக்கிலுக், பெயரிலி, குழலி எழுத்துக்கள் எனக்கு பிடித்துள்ளது. எழுத்து நடையில் மோகன் கந்தசாமி கவர்கிறார்.

டோண்டு சோவுக்கு வக்காலத்து வாங்குவது கொடுமையாக இருக்கிறது. அது அவர் கருத்துரிமை. ஆனால் அவரது ஒரு பதிவை வாசித்த பொழுதே அவரிடம் தர்க்கம் செய்வது எந்த பலனையும் கொடுக்க போவதில்லை என்பது தெரிந்து விட்டது.

சண்டையை நிறுத்துங்கள் என்று சொல்ல நான் யார் ? ஒன்று மட்டும் சொல்ல முடியும். எழுத்து ஒவ்வொருவருடைய சுயமுயற்சி. எழுத்துக்கு வயதில்லை. அதனால் மூத்தப் பதிவர் போன்ற வார்த்தைகள் தேவையற்றது. நாம் எல்லோரும் பதிவர்கள் தான். புதியதாக வருபவர்களுக்கு முன்பே வலைப்பதிவில் இயங்குபவர்கள் தொழில்நுட்பத்தில் உதவலாம்.

மொக்கை பதிவு போடுபவர் எல்லாம் மூத்த பதிவரா ? என்ற தலைப்பு சூடான இடுகையில் இடம் பிடிக்கத் தான். இது யாரையாவது புண்படுத்தினால் மன்னிக்கவும்

Monday, December 1, 2008

மழை, வெள்ளம்- எலிக்கறி சாப்பிட்ட மக்கள்

மழை வெள்ளம் சூழ்ந்ததால் உணவு கிடைக்காத சோகத்தில் மக்கள் எலியை பிடித்து சுட்டுத்தின்ற அவலம் நடந்துள்ளது.

சிதம்பரத்தை அருகில் உள்ளது காட்டுமன்னார் கோயில்.இங்கு இருளர் காலனி உள்ளது. இந்த காலனியில் சுமார் 30 குடும்பத்தினர்க்கும் மேல் வசித்து வருகின்றனர்.

சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக இருளர் காலனியை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் உணவு இல்லாமல் பட்டினியால் பாதிக்கப்பட்ட அக் காலனி மக்கள் அப் பகுதியில் கிடைத்த எலிகளை பிடித்து சுட்டுத் தின்றதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த அரசு உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதி மக்களை சந்தித்து அவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும், இருளர் காலனியில் சூழ்ந்துள்ள தண்ணீரை உடனே அகற்றவும் உத்தரவிட்டனர்.

அதிமுக ஆட்சியில் வறட்சியால் மக்கள் எலிக்கறி தின்பதாக திமுக பெரும் பிரச்சாரம் செய்தது நினைவுகூறத்தக்கது. இவர்களது ஆட்சியில் வெள்ளத்தில் மக்கள் அதையே சாப்பிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

Saturday, November 29, 2008

காட்டாமணக்கு - 2

மாற்று அடுக்கு வகையில் அமைந்த கைவடிவ இலைகளையும் கருஞ்சிவப்பு நிறத்துளிர்களையும் செந்நிற மலர்களையும் உடைய குறுஞ்செடி வகை காட்டாமணக்கு.

இதன் காய் முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறும். விதையும் ஆமணக்கு விதை போலவே சிறிய வடிவில் இருக்கும். இலை, பால், பட்டை, எண்ணெய் மருத்துவ குணம் உடையது.

இலை தாய்ப்பாலையும், உமிழ்நீரையும் பெருக்கும். பால் இரத்தக் கசிவை நிறுத்தும்.
சதை நரம்பு வீக்கத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது. தமிழகம் எங்கும் எல்லாப் பகுதியிலும் தானாகவே வளர்கிறது.

வேறு பெயர்கள்: ஆதாளை, எலியாமணக்கு, எண்டி காட்டு தோட்டை, பஞ்சமுதம், தன்னாத்திரன், தந்தி சிந்திர மூலகம், கனலை, பூனையாமரி, பூம்பச்சரி, காட்டாமணக்கு, வெள்ளைக்காட்டாமணக்கு, கடலாமணக்கு, ஆதளை.

ஆங்கிலத்தில் : jatrophor curcas, linn; Euphorbiaceae.

மருத்துவ குணங்கள்:

காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் கட்டத் தாய்ப்பால் சுரக்கும். இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு வேக வைத்து இறக்கி இளஞ்சூட்டில் துணியில் தோய்த்து மார்பில் ஒத்தடம் கொடுத்து வெந்த இலைகளை மார்பில் வைத்துக் கட்ட தாய்ப்பால் சுரக்கும்.

இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டிகள் மீது கட்டிவர, கட்டிகள் கரையும். வலி குறையும்.

அதன் இளங்குச்சியால் பல் துலக்கப் பல்வலி, பல் ஆட்டம், இரத்தம் வருவது நிற்கும்.

காட்டாமணக்கு எண்ணெயுடன் சமஅளவு தேங்காய் எண்ணெய் கலந்து வெளிப்பூச்சாகப் பூச புண், சிரங்கு ஆறும்.

அதன் பாலை வாயில் கொப்பளிக்க வாய்ப்புண் உடனே ஆறும். பாலைத் துணியில் நனைத்து இரத்தம் கசியும் புண்களில் வைக்க இரத்தப் பெருக்கு நிற்கும். புண் சீழ் பிடிக்காமல் ஆறும்.

வேர்ப்பட்டையை அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து 2 வேளை தொடர்ந்து குடுத்து வர பாண்டு, சோகை, காமாலை, வீக்கம், வயிற்றுவலி, வயிற்றுக் கட்டி, பெரு வயிறு, குட்டம் குணமாகும்.

அதன் முத்துப் பருப்பை மிதமாக எடுத்துப் பால்விட்டு அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து ஒரு டம்ளர் பாலுடன் கொடுக்க பேதியாகும். (சில உடம்புகளுக்கு ஆகாது.)

காட்டாமணக்கு வேரைப் பாலில் அரைத்து நெல்லிக் காயளவு எடுத்து ஒரு டம்ளர் பாலும் கலந்து 2 வேளை குடித்து வர பாண்டு, சோகை, காமாலை, வீக்கம் குணமாகும்.

காட்டாமணக்கின் கொழுந்தை பால்விட்டு அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து ஒரு டம்ளர் பாலுடன் காலையில் மட்டும் தொடர்ந்து குடித்துவர வெள்ளைபடுதல், சிரங்குகள், கட்டிகள் குணமாகும்.

காட்டாமணக்கு வேரின் பட்டையை அரைத்து கீல் வாதத்துக்குப் பற்றிட குணமாகும்.

காட்டாமணக்கின் வேர்ப் பட்டையை அரைத்து சுண்டைக் காயளவு எடுத்து அத்துடன் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு டம்ளர் மோருடன் கலந்து குடிக்கச் செரியாமை, பெருங்கழிச்சல் குணமாகும்.

Sunday, August 10, 2008

காட்டாமணக்கு

காட்டாமணக்கு என்பது பொதுவாகவே வேலிப் பயிர் என்பதான பெயருடன் தான் இருந்து வந்துள்ளது. இது வேலியாக மட்டும் இல்லாமல் உரமாகவும், எரிபொருளாகவும் கூட இருந்து வந்துள்ளது. சிறு வயதில் என் வீட்டைச் சுற்றிலும் இந்த காட்டாமணக்கு செடிகள் அதிகம் இருந்ததுண்டு. இந்த காட்டாமணக்கு என் சிறு வயது வாழ்வில் இரண்டற கலந்து வாழ்ந்து வந்திருக்கிறது.