நான் மதநம்பிக்கை இல்லாதவன். தவிர கிறுத்துவனும் அல்ல. ஆனாலும் எனக்கென்று சில கிறிஸ்துமஸ் நினைவுகள் உண்டு. கிறிஸ்துமஸ் என்றவுடன் என் நினைவுக்கு வருவது வீட்டிற்கு வந்து சில நண்பர்கள் கொடுக்கும் ரூசியான கேக்குகள் தான்.
கிறிஸ்துமஸ் வந்தால் எங்கள் குடும்ப நண்பர் "பாஸ்டர்" பாலசுந்தரம் மாமா வீட்டில் இருந்து கேக் வகையில், பிற இனிப்புகள் எங்கள் வீட்டிற்கு வரும். நாங்களும் தீபாவளி, பொங்கல் சமயங்கள் அவர்கள் வீட்டிற்கு இனிப்புகள் கொண்டு செல்வோம். தவிர விடுமுறை நாட்களில் நாங்கள் அங்கு செல்வதும், அவர்கள் இங்கு வருவதும் வழக்கம்.
பாலசுந்தரம் மாமா சர்ச் ஆப் காட் (Church of God) என்ற பெந்தகோஸ்தே அமைப்பிலே பாஸ்டராக (Pastor) இருந்தார். இங்கிருக்கிற தேவாலயங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிறையப் பணம் வருவதாக ஆர்.எஸ்.எஸ் சொல்லும். ஆனால் தன்னுடைய சொந்த காசிலேயே பாலசுந்தரம் மாமா தேவாலயத்தை நிர்வாகம் செய்து வந்தார். ரோமன் காத்தோலிக்க தேவாலயங்கள் போல வசதியான தேவாலயங்கள் அல்ல பெந்தகோஸ்தே தேவாலயங்கள். குறைந்தபட்சம் பாலசுந்தரம் மாமா இருந்த தேவாலயம் அப்படியானது அல்ல. கீற்று கொட்டகையாகவே இருந்தது. பிறகு ஓடு போட்டார்கள்.
பாலசுந்தரம் மாமாவுக்கு பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் நல்ல வேலை இருந்தது. அதனால் வருமானத்திற்கு பிரச்சனை இல்லை. தேவாலயம், ஏழைகளுக்கு உதவி என நிறைய செய்தார். என் அப்பாவுக்கு கூட சின்ன வயதில் நிறைய உதவி செய்திருக்கிறார். நாங்கள் எப்பொழுதும் அவர் மீது மரியாதை வைத்திருப்போம். எங்கள் மீதும் அவருக்கு பாசம் அதிகம். எங்கள் வளர்ச்சியில் அவருக்கு அதிகம் அக்கறை இருந்தது. நான் அமெரிக்காவுக்கு வருவதற்கு முன்பு அவரிடம் சென்றேன். எனக்காக குடும்பத்துடன் நீண்ட நேரம் ஜபம் செய்தார். ஆனால் அவருடைய மகன்கள் சரியாக படிக்காததில் அவருக்கு வருத்தம் இருந்தது. பிறகு அவர்கள் மொத்த குடும்பமே கிறுத்துவ மத பிரசங்கம் போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது.
பாலசுந்தரம் மாமாவிற்கு புத்தகங்கள் மீது அளவு கடந்த ஈடுபாடு உண்டு. நல்ல ஆங்கில அறிவும் உண்டு. அவருடைய வீட்டிலே பெரிய நூலகம் உண்டு. நான் அவர்கள் வீட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம் புத்தகங்களை கொடுப்பார். நீ நிறைய வாசிக்க வேண்டும் என என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார்.
பாலசுந்தரம் மாமா வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பொழுது அவருடைய ஓய்வுதியத்தை பங்குச் சந்தையிலும், நிதி நிறுவனங்களிலும் போட்டு இருந்தார். சென்னையில் ஒரு காலத்தில் நிதி நிறுவனங்கள் எல்லாம் பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடிய பொழுது அவரது பணமும் அதனுடன் போய் விட்டது. அவர் பங்குச் சந்தையில் போட்டிருந்த பணமும் நஷ்டமாகி விட்டது.
என்னுடைய அப்பா அவருடைய நிலை பற்றி மிகவும் கவலைப்பட்டார். உதவிகளையும் பெற்றுக் கொள்கிறவர் அல்ல மாமா. ஆனால் என் அப்பா கவலைப்பட்ட அளவுக்கு கூட பாலசுந்தரம் மாமா அதைப் பற்றி கவலைப்படவில்லை. எல்லாம் கர்த்தர் செயல் என கூறி விட்டார். ஆனாலும் நல்ல நிலையில் இருந்த குடும்பம் கொஞ்சம் நொறுங்கி போய் விட்டது. அவருடைய மகன்களின் சம்பாத்தியம் பெரிய அளவில் இல்லை. ஒரளவுக்கு சுமாராக அவருடைய வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.
நான் முதன் முறையாக அமெரிக்கா வந்த பொழுது, நீ எனக்கு ஒரு கீ போர்ட் வாங்கி வர வேண்டும் என கேட்டார். பிரசங்கத்தில் பாடல்கள் பாடுவதற்காக கீ போர்ட் வேண்டும் என்றார். நான் வாங்கிக் கொண்டு சென்றேன். அதைத் தவிர தனிப்பட்ட அளவில் அவர் எதுவும் என்னிடம் கேட்டதில்லை.
எனக்கு மத நம்பிக்கை இல்லை என்பது அவருக்கு தெரியும். பெரியார் பற்றியும் பிற விஷயங்கள் பற்றியும் அவரிடம் பலமாக விவாதிப்பேன். அவரின் கொள்கைகள் கன்சர்வேடிவாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். பல பிரசங்க கூட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்தியிருக்கிறார். ஆனால் அவர் அதனை யார் மீதும் திணிக்க வில்லை. அவருடைய நம்பிக்கையாகவே அது இருந்து விட்டது.
கடந்த முறை விடுமுறைக்கு சென்ற பொழுது பாலசுந்தரம் மாமவிற்கு கிட்னி பாதிக்கப்பட்டிருக்கிறது. டயாலிசிஸ் செய்கிறார்கள். போய் பார்த்து விட்டு, பண உதவி ஏதாவது செய் என்றார். நிறைய பணம் தேவைப்படுகிறது என்றார் அப்பா. பணம் பெற்றுக் கொள்வாரா என கேட்டேன். வாங்கிக் கொள்வார். இப்படி நிறையப்பேர் கொடுப்பதால் தான் அவருடைய சிகிச்சை நடக்கிறது. கொடு என்றார்.
நான் அவருடைய வீட்டிற்கு சென்று கொடுத்த பொழுது பணத்தை வாங்கிக் கொண்டார். பிறகு சொன்னார். என்னிடம் பணமே இல்லை. ஆனால் எப்படி தான் கிடைக்கிறதோ தெரியவில்லை. சரியாக டயாலிஸிஸ் செல்வதற்கு பணம் கிடைத்து விடுகிறது. எல்லாம் கர்த்தரின் செயல் என்றார். நான் மனதுக்குள் "இல்லை மாமா நீங்கள் நிறைய நல்லது செய்து இருக்கிறீர்கள். நல்லவர்களை சம்பாதித்து இருக்கிறீர்கள். அவர்களுக்கு தேவைப்படுகிற நேரத்தில் கொடுத்தீர்கள். அதனால் தான் உங்களுக்கு தேவைப்படுகிற நேரத்தில் பணம் கிடைக்கிறது" என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
விடுமுறை கழிந்து வரும் பொழுது வழக்கம் போல ஜபம் செய்து என்னை வழியனுப்பி வைத்தார். இம் முறை விடுமுறை சென்ற பொழுதும் மாமாவை பார்க்கச் சென்றிருந்தேன். கொஞ்சம் தளர்ந்து போய் இருந்தார். ஆனால் மருத்துவச் செலவை அவர் பணியாற்றிய பொதுத்துறை நிறுவனமே ஏற்று கொண்டிருக்கிறது. அதனால் ஒன்றும் பிரச்சனையில்லை. இனி சமாளித்துக் கொள்வார் என்று அப்பா சென்னார். இப்படியான விஷயங்கள் கர்த்தர் மேலான அவரது நம்பிக்கைகளை அதிகரித்து இருந்தது. எத்தனையோ பிரச்சனைகளுக்கு மத்தியிலும் தனக்கு நடக்கும் இத்தனை நல்ல விஷயங்களுக்கும் காரணம் கர்த்தர் தான் என உறுதியாக நம்பினார்.
மாமாவிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். என்னிடம் பேசுவது அவருக்கு பிடிக்கும். பல உலக நடப்புகளை அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அமெரிக்காவில் தேர்தல் நிலவரம் எப்படி உள்ளது. ஒபாமா வெற்றி பெறுவாரா எனக் கேட்டார். அவர் கருத்தில் கொஞ்சம் கன்சர்வேடிவ் சாயல் இருக்கும். ஆனாலும் ஒபாமா பற்றி எதுவும் அவர் தவறாக கூறவில்லை. இந்தியாவில் இருந்த அடக்குமுறைகள் குறித்த அவர் கருத்து எனக்கு தெரியும். ஒபாமாவை அவர் ஆதரிப்பதாகவே உணர்ந்து கொண்டேன்.
பிறகு வழக்கம் போல விடைபெறும் பொழுது நீண்ட ஜபம் இருந்தார். அடுத்த முறை மாமாவை மறுபடியும் பார்க்க வேண்டும் என்று மட்டும் அப்பொழுது நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். இப்பொழுதும் டயாலிசிஸ் எடுத்துக் கொண்டிருந்தாலும் நலமாக இருக்கிறார்.
இந்த கிறுஸ்துமஸ் பொழுது ஏனோ இந்த ஞாபகங்கள் என் மனதில் வந்தது. மதங்களைச் சார்ந்த நம்பிக்கைகள் மனிதனை பண்படுத்தியிருக்கிறது என்பதை பெரியார் கருத்தில் நம்பிக்கை கொண்ட நானும் பல நேரங்களில் உணர்ந்து இருக்கிறேன். பாலசுந்தரம் மாமாவின் வாழ்க்கை அப்படியான ஒரு கருத்தை என் மனதிலே விதைத்து இருக்கிறது. கமல் நடித்த அன்பே சிவம் படம் போல அன்பும், நேசமும், சகோதரத்துவமும் தான் சிவம், கர்த்தர், புத்தர் என எல்லாமும். மதம் மனிதனை நேசிக்கவே கற்று கொடுக்கிறது. புத்தரும், கர்த்தரும் மதவெறியை எதிர்த்து தங்கள் பிரச்சாரத்தை தொடங்கினார்கள்.
அதிகாரத்தை எதிர்த்து ஒலித்த குரல் யேசுவினுடையது. யேசு சோசலிசத்தை முதலில் முன்வைத்தவர்களில் ஒருவர். அன்பு, சகோதரத்துவம், அதிகாரத்திற்கு எதிரான குரல் போன்றவற்றை பிரதிபலித்தவர் யேசு கிறிஸ்து.
இந்தியாவை திரும்பி பார்க்கும் பொழுது மத தலைமைகள் பிற்போக்குவாதத்தையும், அடிப்படைவாதத்தையும், ஏற்றத்தாழ்வுகளையுமே போதிக்கிறது. அந்த ஏற்றத்தாழ்வுகளை தக்கவைக்க மதக்கலவரங்களை உண்டாக்குகிறது.
மனிதன் அன்பினையே நாடுகிறேன். மனிதனின் உணர்வுகளை தங்கள் அதிகாரத்தை தக்கவைப்பவர்களே தூண்டி விடுகிறார்கள். வெறி கொள்ள வைக்கிறார்கள். எனக்கு கிறிஸ்துமஸ் கேக்குகள் மட்டும் கிடைக்கவில்லை. ரமலான் நோன்பு கஞ்சிகள் நிறைய கிடைத்து இருக்கின்றன. சிறிய வயதில் கிறிஸ்துமஸ், ரமலான் பண்டிகையை கூட அன்று கிடைக்கப்போகிற வித்யாசமான இனிப்புகளுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து இருந்து இருக்கிறேன். அந்த இணக்கத்தை மத வெறியர்கள் கெடுத்து விடக்கூடாது என்பதே என்னுடைய எண்ணம்.
எழுதப்படாத கவிதையின் இறுதி வரி
10 months ago
5 Responses:
//மத தலைமைகள் பிற்போக்குவாதத்தையும், அடிப்படைவாதத்தையும், ஏற்றத்தாழ்வுகளையுமே போதிக்கிறது//
உண்மையாக கூட இருக்கலாம். ஒன்று நான் கவனித்தேன். இந்திய கிறிஸ்துவர்களுக்கு இருக்கும் பக்தி அமெரிக்கவாழ் மக்களுக்கு இல்லை? ஏன்?
எல்லா இடங்களிலும் மத தலைமைகள் பிற்போக்குவாதத்தை பிரச்சாரம் செய்கின்றன. அமெரிக்காவில் கடந்த ஆண்டு வெளிப்பட்ட polygamy போன்றவை இதனை வெளிப்படுத்துகின்றன.
நீங்கள் இருக்கும் இடத்தில் அதிகளவில் சர்ச்சுகள் இல்லை என நினைக்கிறேன். அமெரிக்காவில் மூலை முடுக்குகளில் இருக்கும் பல வகையான சர்ச்சுகளை பார்த்தால் இவ்வாறு கூற மாட்டீர்கள்
நம்மூரில் இருக்கும் எல்லா எழவுகளும், இந்த ஊரிலும் உண்டு
பாலசுந்தரம் மாமா அடிக்கடி காத்தோலிக்கர்களை கடுமையாக சாடுவார். அன்னை மரியா என்று கூறு தேர் இழுக்கும் பழக்கம் எல்லாம் இந்து மதத்தின் வெளிப்பாடு தான் என்பது அவரது கருத்து. காத்தோலிக்கர்கள் மதத்தை பரப்புவதற்காக எல்லா விதமான பிற்போக்குதனத்தையும் இந்தியாவில் செய்கிறார்கள். இந்து மதத்தை போலவே செய்தால் தான் மதத்தை பரப்ப முடியும் என்ற நம்பிக்கையில் இந்து மதத்தில் உள்ளது போன்ற அதே வகையிலான போலித்தனங்களை கிறுத்துவத்திலும் கொண்டு வருகிறார்கள் என்பது எப்பொழுதுமே அவரது குற்றச்சாட்டாக இருக்கும். வேலாங்கண்ணி மாதா போன்ற விஷயங்களை எல்லாம் அவர் கடுமையாக சாடுவார்.
எனக்கு அந்த கருத்துகளில் உடன்பாடு உண்டு
//
காத்தோலிக்கர்கள் மதத்தை பரப்புவதற்காக எல்லா விதமான பிற்போக்குதனத்தையும் இந்தியாவில் செய்கிறார்கள். இந்து மதத்தை போலவே செய்தால் தான் மதத்தை பரப்ப முடியும் என்ற நம்பிக்கையில் இந்து மதத்தில் உள்ளது போன்ற அதே வகையிலான போலித்தனங்களை கிறுத்துவத்திலும் கொண்டு வருகிறார்கள்
//
காட்டாமணக்கு,
நீங்கள் சொல்வது மிகச் சரி. காத்தோலிக்கம் இந்தியாவில் சாதிகளையும் கட்டி வளர்க்கிறது. இந்து மதம் போதித்த சாதியை அப்படியே தன்னுள் உள்வாங்கி கொண்டது. அந்த சாதியை கலைய எந்த வித முயற்சியையும் எடுக்க வில்லை. அப்படி எடுத்தால் அது கிறுத்துவ மதத்தை இந்தியாவில் அடியோடு சாய்த்து விடும் என்ற அச்சம் தான் காரணம்.
சமீபத்தில் கூட வன்னிய கிறுத்துவர்கள் - தலித் கிறுத்துவர்கள் பிரச்சனையில் எந்த முயற்சியையும் காத்தோலிக்க தலைமை செய்யவில்லை. வன்னிய கிறுத்துவர்கள் மதம் மாறுவோம் என அச்சுறுத்திய பொழுது அதனை கண்டு காத்தோலிக்க தலைமை அஞ்சியது. அந்த அச்சத்தாலேயே சாதிப் பிரிவுகளை கலைய வேண்டும் என்று முயற்சி செய்யவில்லை.
தலித் மக்களுக்கு தனி சர்ச், மற்ற சாதியினருக்கு தனி சர்ச் போன்ற பேதங்களை காத்தோலிக்கம் வளர்க்கிறது.
இந்த இடுகைக்கு நன்றி
அனானி,
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி
saar vanniya kristuargal endra enna?
Anbe Sivam is one hellover great movie which succesfully decribe how should Human be...it's all about leving each other as one love himself.
This is what Jesus preached the people
"love thy neighbour as you love yourselves"
Branchis Simon, Malaysia
Post a Comment