Tuesday, February 3, 2009

தமிழர் எழுச்சி - மாமாக்களும், மாமிகளும் அலறுவது ஏன் ?

1. முத்துக்குமாரின் வீர மரணத்திற்கு பிறகு மாமாக்களும், மாமிகளும் அலறிக்கொண்டு இருப்பது தெரிகிறது. முத்துக்குமாரின் மரணம் அடங்கி இருந்த தமிழர்களின் இன உணர்வை வெளிப்படுத்தி விட்டது. அதனால் மாமக்களுக்கும், மாமிகளுக்கும் கிலி பிடித்து விட்டது

2. இன்றைய 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர்களுக்கு இன உணர்வு இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பிறகான நாட்களில் உலக நடப்பை காண தொடங்கிய இந்த தலைமுறையினருக்கு எந்தளவுக்கு மொழிப் பற்றும், இனப்பற்றும் இருக்கும் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. சினிமா பார்த்து வளர்ந்த பலவீனமான சமுதாயத்தை நாம் கொண்டு இருக்கிறோமோ என்ற அச்சம் இருந்தது.

ஆனால் இன்று அந்தக் கவலைகள் எல்லாம் பறந்து போய் விட்டது. 1965ல் இருந்ததை விட மிக அதிகமான இன உணர்வு தற்பொழுது தென்படுவதாக சென்னையில் இருக்கும் என் மாமா தெரிவித்தார்.

3. மதுரையில் இந்திய தேசியக் கொடியை எரித்து இருக்கிறார்கள். முதன் முறையாக தமிழகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. எனக்கு கூட அதிர்ச்சி தான்.




4. முத்துக்குமாரை தொடர்ந்து மறைந்த "வீரத் தமிழ் மகன்" ரவி இறுதி ஊர்வலத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. தமிழ் இன உணர்வு பரவட்டும். ஆனால் தீக்குளிப்புகளும், தற்கொலைகளும் வேண்டாம்.

5. அருமைத் தம்பி முத்துக்குமார் தற்கொலை மட்டும் செய்து கொள்ள வில்லை. அவரது பேனாவையும் பேச வைத்து விட்டு தான் மறைந்தார். இன்று பேசிக் கொண்டிருப்பது அவரது தீக்குளிப்பு அல்ல. அவரது எழுத்து தான் இன்று பேசிக் கொண்டிருக்கிறது.

6. அவருடைய அந்த எழுத்து தான் மாமாக்களையும், மாமிகளையும் எரிச்சல்படுத்தியிருக்கிறது. தெளிவாக ஒரு சிந்தனையை மக்களிடம் கொண்டு சேர்த்து விட்டானே இந்த இளைஞன் என எரிச்சல் படுகிறார்கள். அவரது மரணத்தை கொச்சைப்படுத்துவது போல உணர்ச்சிவசப்பட்டு இறந்து விட்டான் என்கிறார்கள்.

7. அருமைத் தம்பி முத்துக்குமார் உணர்ச்சிவசப்படவில்லை. தெளிவாக சிந்தித்தான். அவனுடைய மரணம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தான். அதற்கு வேண்டிய காரியங்களை நிதானமாக செயல்படுத்தி இருக்கிறான். அவன் தற்கொலையை உணர்ச்சிபூர்வமாக அணுகவில்லை. தற்கொலையை ஆயுதமாக கையில் ஏந்தினான். அந்த ஆயுதம் தான் இன்று அதிகாரத்தில் இருப்பவர்களை தூக்கம் இல்லாமல் செய்திருக்கிறது. அரசியல்வாதிகளையும், கூடவே மாமாக்களையும், மாமிகளையும் நிம்மதி இல்லாமல் செய்திருக்கிறது.

8.முத்துக்குமாரின் தியாகத்தை கொச்சைப்படுத்த எளிமையான வழி, அவன் உணர்ச்சிவசப்பட்டு விட்டான் என்பது. உணர்ச்சிவசப்படுபவன் பல மணி நேரங்கள் செலவு செய்து தீர்க்கமான மரண சாசனம் எழுத மாட்டான். உடல் முழுவதும் எரிந்து போன நேரத்திலும், இறுதி மூச்சிலும் என்னுடைய சாதி தமிழ்ச்சாதி என கூற மாட்டான். தன்னுடைய உடலின் வலியை கூட அவன் எங்கேயும் காட்டியதாக படிக்கவில்லை. அவன் அழுது அரற்றியதாக படிக்கவில்லை. ஈழத்தமிழர்களை காப்பற்றுங்கள் என்று கொள்கை முழுக்கமாகத் தான் அவன் கத்தி இருக்கிறான்.

அருமைத்தம்பியின் தியாகத்தை உணர்ச்சிமயமாகியது என கொச்சைப்படுத்தாதீர்கள். அவன் ஒரு புதிய வகை ஆயுதம் ஏந்தி இருக்கிறான்.

9.மாணவர்கள் படிக்க வேண்டும் என்று சில மாமாக்கள் பதிவு எழுதி கொண்டிருக்கிறார்கள். இதை எய்ம்ஸ் இடஒதுக்கீடு போராட்டத்தின் பொழுது இவர்கள் தெரிவித்தார்களா ? மாணவர்கள் பொங்கி எழுந்தார்கள் என்றல்லவா ஊடகங்கள் அப்பொழுது எழுதிக் கொண்டிருந்தன. இப்பொழுது மாணவர்கள் படிக்க வேண்டுமாம்.

10. நல்ல காமெடி மாமா. எங்கள் மாணவர்கள் படிக்கவும் செய்வார்கள். உங்களை படிய வைக்கவும் செய்வார்கள்.