Monday, January 19, 2009

தமிழ் சினிமா, பூ, பெண்கள், கமல்ஹாசன், சினிமா அயோக்கியத்தனம்

1. தமிழ் சினிமாவில் பெண்கள் எப்பொழுதும் போகப் பொருளாகவே பயன்படுத்தப்பட்டுள்ளனர். கதாநாயகனை காதல் செய்வதும், மரத்தைச் சுற்றி பாடுவதும், கண்ணை கசக்கி கொண்டு கதாநாயகனிடம் அடிபடுவதும், முத்தம் பெறுவதும் தான் பெரும்பாலான பெண்களின், கதாநாயகிகளின் பணியாக இருந்து வந்திருக்கிறது. ஒரு சில படங்களை தவிர பெரும்பாலும் இப்படியான படங்களையே தமிழ் சினிமா கொடுத்திருக்கிறது.

பெரும்பாலான படங்கள் இப்படி உள்ள நிலையில் பெண்ணின் காதலை கவிதை போன்று ஏதேனும் திரைப்படம் கூறியிருக்கிறதா என யோசித்து பார்த்தேன். எந்தப் படமும் நினைவில் வரவில்லை. காதல் என்றாலே அது ஆணின் மன உணர்ச்சி, சோகம், பெண்ணை நம்பாதே போன்ற அறிவுரைகள், தாடி வைத்துக் கொண்டு திரியும் ஆண், பெண்கள் என்றாலே காதல் தோல்வியை ஏற்படுத்துபவர்கள் என்ற சித்தரிப்பே பெரும்பாலும் படைக்கப்பட்டுள்ளது. பெண்ணின் காதலை சொல்லிய படங்கள் மிகவும் குறைவு. அந்த காதலின் பல்வேறு பரிமாணங்களை படம் முழுவதும் கட்டிய படங்கள் அதை விடவும் குறைவு.

2. இவ்வளவு பீடிகையுடன் எந்தப் படத்தை விளக்குகிறேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அந்தப் படம் "பூ". இதனை நேற்று தான் பார்த்தேன். மாரி என்ற பெண்ணின் காதலை மிக அழகாக, ஒரு கவிதை போல இயக்குனர் படைத்திருக்கிறார். மாரியின் காதல், அவளின் தவிப்பு, அவளின் நேசம் போன்றவையெல்லாம் மிக அழகாக படத்தில் படைத்திருக்கிறார் இயக்குனர்.



3.தங்கர்பச்சன் அழகாக எடுத்த அழகி திரைப்படத்துடன் பூ திரைப்படம் ஓரளவுக்கு பொருந்தி வருகிறது. அழகி ஒரு ஆண் தன் பழைய காதலி குறித்த எண்ணங்களாக விரியும் பொழுது பூ ஒரு பெண்ணின் காதலை விவரிக்கிறது. அழகி பேசப்பட்ட அளவுக்கு பூ திரைப்படம் மக்கள் மத்தியில் பேசப்படாதது விந்தையாக உள்ளது. பெண்ணை சார்ந்து எடுக்கப்பட்ட திரைப்படம் அதனால் பேசப்படவில்லை என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால் அதுவல்ல காரணம். சாதாரண கிராமத்து பெண்ணைக் குறித்து பேசியது காரணமாக இருக்கக்கூடும்.

4.நகரத்து நவ நாகரிக பெண்ணின் காதல் கவர்ச்சியை மையப்படுத்தி படம் வந்திருந்தால் பத்திரிக்கைகளில் விளம்பரம் கிடைத்திருக்கும். மட்டமான "வாரணம் ஆயிரம்" திரைப்படத்திற்கு அப்படி தான் விளம்பரம் கிடைத்தது. தமிழ் வலைப்பதிவில் கூட அதனை அழகான புதினம் என்றெல்லாம் பலர் எழுதி இருந்தார்கள். ரசனை மாறுபடவே செய்கிறது. ஆனால் ரசிக்கப்படும் பார்வையில் இருக்கும் மேல் அடுக்கு, கீழ் அடுக்கு சமூக பார்வைகளும் கவனிக்கப்பட வேண்டியவையே.

5.ஏ செண்டர் படம், பி செண்டர் படம் என்ற சமூக அடுக்கு சார்ந்த விமர்சனங்களைக் கடந்து, இப்படியான ரசனையை தமிழ் சினிமா வியபாரிகள் உருவாக்குகிறார்கள் என்ற கருத்துடையவன் நான். தமிழ் சினிமா, சினிமா வியபார முதலாளிகளின் கைகளில் சிக்குண்டு தவிக்கிறது. தமிழ் சினிமா இப்படி தான் இருக்க வேண்டும் என்ற வரையறையை இந்த முதலாளிகள் வகுக்கிறார்கள். இவர்களின் இந்த இலக்கணத்தை உடைக்க இங்கே பெரும்பாலானவர்களுக்கு தைரியம் இல்லை. அப்படி உடைக்கும் இயக்குனர்கள் கூட தங்களின் படங்களை முழுமையான மாற்று சினிமாகவோ அல்லது நல்ல சினிமாகவோ எடுக்க முயலுவதில்லை. சினிமா வியாபாரத்திற்கு கட்டுபட்டு தங்களின் சுய எண்ணங்களை சிதைத்துக் கொண்டே படத்தை படைக்கிறார்கள். தங்களை சிதைத்து கொள்ளுவதை கமர்ஷியலுக்கு செய்யும் தியாகமாகவும் சில இயக்குனர்கள் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் கமர்ஷியல் அதனால் தான் நடக்கிறதா என்ற கேள்விக்கு தங்களை இவர்கள் உட்படுத்திக் கொள்வதேயில்லை.

தங்கர்பச்சான் எடுத்த அழகி திரைப்படத்திலே "குருவி குடைந்த கொய்யாப்பழம்" ரெக்கார்ட் டான்ஸ் பாடலுக்கு அவசியம் என்ன நேர்ந்தது ? மொத்த படத்தையும் அது சிதைத்தது. ஆனால் கமர்ஷியல் வெற்றிக்கு அது தேவை என்பதாக சினிமா வியாபாரிகள் நம்புவது மட்டுமில்லாமல் பார்வையாளனையும் நம்பவைக்க முனைகிறார்கள்.

6.தமிழ் சினிமாவில் எத்தனையோ அயோக்கியத்தனங்கள் நடந்து வருகின்றன. அதனையெல்லாம் பட்டியல் போட போவதில்லை. ஆனால் தமிழ் சினிமாவில் எத்தனையோ நல்ல படங்கள் இருந்தாலும் "உலக தரத்திற்கு சினிமா" என்னும் பொழுது கமல்ஹாசனை நோக்கி பார்க்கும் பார்வை மகா அயோக்கியத்தனம். கமல்ஹாசன் தன்னை தமிழ் சினிமாவில் நல்ல படங்களை மட்டுமே கொடுப்பதாக வெளிப்படுத்திக் கொண்டதற்கு பிறகு கமல்ஹாசன் எடுத்த படங்களில் எத்தனை படங்கள் நல்ல படங்கள் என்று பார்த்தால் மகாநதி திரைப்படத்தை தவிர வேறு எதுவும் தோன்றவில்லை. குணா உலக மகா குப்பை. அதனை சிறந்த சினிமா என்று பீற்றிக் கொண்டார். மரண தண்டனைக்கு எதிரான படம் விருமாண்டி என்று கூறிக்கொண்டு க்ளைமேக்ஸில் பசுபதியை கொன்றார். படத்தின் கருவையே கொச்சப்படுத்துகிறோம் என்று தெரியாத அறிவுஜீவி தான் "உலக நாயகன்" கமலஹாசன். கமலஹாசனின் படங்களுக்கு ரஜினி படங்களையே பார்த்து விசிலடித்துக் கொண்டு சென்று விடலாம்.

7.சிறுகதையாக வெளிவந்த கதையின் திரையாக்கம் தான் பூ என படித்திருந்தேன். சிறுகதை எப்படி இருந்திருக்கும் என்பது தெரியவில்லை. படம் அழகாக எடுக்கப்பட்டு இருந்தது. தன் காதலை சிறு வயதில் இருந்து தன் மனதில் வளர்த்து வரும் பெண்ணின் கதை தான் பூ. கதை ஒன்றும் பெரிய பிரமாதம் இல்லை. க்ளைமேக்ஸ் கூட அப்படி ஒன்றும் வித்யாசமாக எடுக்கப்படவில்லை. ஆனால் படம் சொல்லிய விதம் கவர்வதாக இருந்தது.

8. பள்ளிக்கூடத்தில் நீ யாராக விரும்கிறாய் என கேட்பதாக இருக்கட்டும், செல்பேசியின் எண்ணையை ஞாபகம் வைத்துக் கொள்வதாக இருக்கட்டும், பழம் பறித்துக் கொண்டு கொடுக்க ஓடுவதாக இருக்கட்டும் பல இடங்களில் சினிமாத்தனங்களை மறந்து படத்தை ரசிக்க முடிந்தது

9. கதாநாயகனுக்கு இந்தப் படத்தில் வேலை இல்லை. அது மகிழ்ச்சி அளித்த மாற்றம். கடைசியில் அழுது கொண்டே முடிவது விசனப்பட்ட வழக்கமான மசாலா

10. இறுதியாக இன்னும் கூட நல்ல விமர்சனம் எழுத வேண்டும் என்று ஆசை தான். அதிகாலை 3மணிக்கு தூக்கம் இல்லாமல், என்ன செய்வது என்று தெரியாமல் எழுதினால் இப்படி தான் எழுத முடியும் போல

7 Responses:

Anonymous said...

மிக நல்ல பதிவு

கிரி said...

//கடைசியில் அழுது கொண்டே முடிவது விசனப்பட்ட வழக்கமான மசாலா//

அந்த அழுகை எதற்கு என்று நீங்கள் சரியாக உணர்ந்தால் அது மசாலாவிற்க்காக இல்லாமல் ஒரு பெண்ணின் உண்மையான் அன்பு என்று உணர்வீர்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பூவை மிகரசித்து , இப்படியும் தமிழில் படமெடுக்கிறார்களே!!என ஆச்சரியத்துடன் பார்த்தேன்.
வேறு ஒரு பதிவர் "தொப்புள் காட்டாத் தமிழ்ப்படம்" என கூறினார்.
இது ஒரு தமிழ்ப்படம்...இதுவே தமிழ்ப் படம்.
இதன் வணிக ரீதியான தோல்வி....வேதனையே ஆனால் நல்ல தமிழ்ப்படம் எனும் சிறப்பில் இருந்து
இம்மி தனும் இறங்கவில்லை...என்னைப் பொறுத்தமட்டில்!
நல்ல அலசல்..

shabi said...

nalla padhivu padam innum parkka villai/kamalin anbe sivam patri onrum sollavillaye

காட்டாமணக்கு said...

//
அந்த அழுகை எதற்கு என்று நீங்கள் சரியாக உணர்ந்தால் அது மசாலாவிற்க்காக இல்லாமல் ஒரு பெண்ணின் உண்மையான் அன்பு என்று உணர்வீர்கள்.
//

கிரி,

அதனை நான் உணர்கிறேன். ஆனால் இறுதிக் காட்சிகள் சற்று மசாலாத்தனமான முடிவாக இருந்தது. சில படங்களின் இறுதி காட்சிகள் நம்மை என்னவோ செய்யும். ஆனால் அவ்வாறு இல்லாமல் வழக்கமான தொனியிலேயே இருந்தது அலுப்பாக இருந்தது

காட்டாமணக்கு said...

//kamalin anbe sivam patri onrum sollavillaye//

அன்பே சிவம் நல்ல படம். ஆனால் கமலின் படங்களை யோசித்த பொழுது வரிசையாக பஞ்சதந்திரம் வகையிலான படங்களே ஞாபகத்தில் வந்து தொலைத்து விட்டது :))

காட்டாமணக்கு said...

நன்றி யோகன் பாரிஸ்