Sunday, December 14, 2008

கூவம் நதிக்கரை வாசம்

சென்னை சூளைமேடு நமச்சிவாயபுரம் தான் முதன் முதலில் நான் சென்னையில் குடிபுகுந்த இடம். பெட்டிகளுடன் நமச்சிவாயபுரம் வந்து சேர்ந்த பொழுது அந்தளவுக்கு கூவத்துடன் நெருக்கமாக நான் இருப்பேன் என்பது எனக்கு தெரியாது. நண்பன் அறையை கொண்டு வந்து காட்டிய பொழுது ஒரு அருமையான நறுமணம் வீசிக் கொண்டிருந்தது. "என்ன அது நாற்றம் என்றேன் நண்பனிடம். நாற்றம் என்று சொல்லாதே, நல்ல வாசனை என்றான். தினமும் இங்கே தான் இருக்கப் போகிறோம், பழகி விடும் என்றான். சில நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் சென்னையின் போக்குவரத்து புகைமண்டலம் என்னவோ செய்தது. அங்கே இருக்கத் தான் வேண்டும். வேறு வழியில்லை. சென்னையில் எனக்கு வேறு நண்பர்கள் இல்லை. வேலை தேடியாக வேண்டும். வேலை தேட சென்னையை விட சிறந்த இடம் தமிழ்நாட்டில் வேறு இல்லையே ? சில நாட்களில் சரியாகி விட்டது. அல்லது பழகி விட்டது.

சென்னை நமச்சிவாயபுரத்தில் இருக்கும் பொழுது சென்னையில் இருக்கிறோமா என்று தெரியாது. கிராமத்தில் இருப்பது போலவே இருக்கும். கிழக்கு நமச்சிவாயபுரம், மேற்கு நமச்சிவாயபுரம் என இரண்டு பகுதிகள் உள்ளது. கிழக்கு நமச்சிவாயபுரம் குடிசைப் பகுதி, மேற்கு நமச்சிவாயபுரம் கட்டிடங்களுடன் இருக்கும். நான் இங்கே தான் இருந்தேன். நமச்சிவாயபுரத்தை ஒட்டி தான் கூவம் ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. கூவத்திற்கு அடுத்தாற் போல குடிசைப் பகுதிகள். அதை தாண்டினால் பச்சையப்பா கல்லூரி, அமைந்தகரை (சென்னை தமிழில் அம்ஜிகரை) போன்ற பகுதிகள்.

என்னுடைய அறை கிட்டத்தட்ட கூவம் நதிக்கரை வாசம் தான். என் அறைக்கும், கூவம் நதிக்கரைக்கும் இடையில் மற்றொரு தெரு உண்டு. காலையில் எழுந்து நான் தங்கியிருந்த வீட்டின் பால்கணிக்கு வந்தால் கூவம் நதி தெரியும். நல்ல கறுப்பு நிறத்தில் கூவம் ஆறு ஓடும் அழகே தனி தான். காலையில் எழுந்தால் இந்தப் பக்கம் கூவம் ஆறு என்றால் எதிர்பக்கத்தில் அழகான ஒரு தாவணி. அவர் பெயர் நினைவில் இல்லை. முஸ்லீம் பெண். நல்ல அழகாக இருப்பார். அவரை நான் தங்கியிருந்த விடுதியின் அத்தனை பேரும் பார்த்து கொண்டிருப்பர். சிலர் இங்கிருந்து சாடை காட்டுவார்கள். அவர் பலருக்கு பழிப்பு காட்டுவார். சில நேரம் சிரிப்பார். நாம் நாகரிகமாக நடந்து கொண்டால் சைகையில் நாகரிகமாகவே பதில் வரும் என்பது என் அனுபவம். அநாகரிகமாக நடந்து கொண்ட சிலருக்கு செருப்பு எடுத்துக் காட்டியிருக்கார். ஒருவரை நோக்கி செருப்பை வீசியிருக்கிறார். ஆனால் அவர் நாங்கள் செய்த சேட்டைகளை விரும்பினார். எதையும் அவர்கள் வீட்டில் கூறியது இல்லை. அவருக்கும் வீட்டில் பொழுது போக வேண்டும் அல்லவா ? மிக நல்ல பெண். நான் அங்கிருந்த பொழுதே அவருக்கு திருமணம் நடந்தது. இங்கிருந்து திருமணம் ஆகப் போகிறதா என்று சைகையில் கேட்ட பொழுது ஆம் என்று சிரித்தார். பிறகு காணாமல் போய் விட்டார். இந்த விடுதியில் இருந்த பெரும்பாலானோர் அவருக்கு சைகை காட்டியிருக்கிறார்கள். ஆனால் அவரிடம் யாரும் பேச முயற்சிக்க வில்லை. அவர் பெரும்பாலும் தன்னுடைய பாதுகாப்பு படைகளுடனே வெளியே வருவது காரணமாக இருந்திருக்கும்.

நான் இருந்தது மேன்ஷன் போன்ற அமைப்பு. ஆனால் மேன்ஷன் இல்லை. மூன்று மாடி. ஒவ்வொரு மாடியிலும் நான்கு அறைகள். எல்லா அறைகளிலும் பேச்சிலர்கள் தான். பலர் பலவிதமான வேலைகளில் இருந்தனர். நாங்கள் எங்கள் கல்லூரி தோழர்கள் அனைவரும் ஒரு அறையில் இருந்தோம். அனைவருமே சாப்ட்வேர் வேலைக்கு தான் முயற்சி செய்து கொண்டிருந்தோம். பி.இ. முடித்தவன் எல்லாம் சாப்ட்வேருக்கு தானே போக வேண்டியிருக்கிறது. அந்த அறையில் மொத்தம் இருக்க வேண்டியவர்கள் 4 பேர் தான். ஆனால் ஐந்தாவது ஆளாக நான் இருந்தேன். இது தவிர இரவு சினிமாவுக்கு சென்று விட்டு இன்னும் சில நண்பர்களும் எங்களுடன் படுத்துக் கொள்வர். அந்த சின்ன அறையில் பத்து பேர் வரை படுத்திருக்கிறோம். இன்றைக்கு முடியுமா என தெரியவில்லை. பெட் இல்லாவிட்டால் முதுகு வலிக்கிறது. கட்டிடத்தின் உரிமையாளர் அவ்வப்பொழுது வருவது வழக்கம். அவர் வரும் நேரத்தில் ரகளை நடக்கும். ஒவ்வொரு அறையிலும் நிறையப்பேர் இருப்பார்கள். பெரும்பாலும் ஞாயிறு காலையில் தான் அவர் வருவார். அவர் வரும் பொழுது நழுவி வெளியே ஓட வேண்டி வரும்.

சூளைமேடு வாழ்க்கையில் குடிசை வாழ்க்கையின் அனுபவங்களையும், ஒண்டிக்குடித்தனங்களின் சண்டைகளையும் நிறைய பார்த்திருக்கிறேன். காலையில் வரும் மெட்ரோ லாரி தண்ணீருக்காக நடக்கும் சண்டையே தனி தான். க்ளோரின் வாசனையுடன் இன்றைக்கு அந்த தண்ணீரை குடிக்க நிறைய யோசிப்பேன். ஆனால் அன்றைக்கு பையில் இருந்த பணத்திற்கு அதுவே தேங்காய் தண்ணீர் போலத்தான் இருந்தது. நடக்கும் சண்டையின் வசவுகளை பல நேரங்கள் கேட்டுக் கொண்டிருப்பேன். அந்த வசவுகளுக்கு இலக்கணம் வைத்து பார்த்தால் தமிழன் காமத்தில் எவ்வளவு கரைதேர்ந்தவன் என்பதும், மிடில்க்ளாஸ் வாழ்க்கையில் நாகரிகமாக எத்தனை அசிங்கங்களை மறைத்துக் கொண்டிருக்கிறான் என்பதும் தெரியும்.

என் பக்கத்து அறையில் ஒரு நண்பன் இருந்தான். அவன் பெயர் நினைவில் இல்லை. மன்மதன் என்றால் அவன் தான். ஒரு நாள் மதியம் என்னுடைய அறையில் இருந்து சாதாரணமாக ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த பொழுது யாருக்கோ அவன் சைகை காட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. எனக்கு அப்பொழுது வேலையில்லை. வேலையில்லாவிட்டால் வேறு என்ன செய்வது. அவன் யாருக்கு சைகை காட்டுகிறான் என நோட்டம் விட்டேன். அங்கே இருந்தவரை பார்த்த பொழுது திக் என்றது. அவர் அதே தெருவில் உள்ள ஒரு குடும்பத்தலைவி. பல கதைகள் பிறகு கேள்விபட்டேன்.

கூவம் நதிக்கரையில் நான் ரசித்த மற்றொரு விஷயம் கானா பாடல்கள். முக்கிய விழாக்களில் கானா பாடல் கச்சேரிகளை வைப்பார்கள். கூவம் நதிக்கரை கண்ணெடுத்த சொத்து இந்த கானாபாடல்கள். இந்த கானா பாடல்கள் முன்வைக்கும் விஷயங்களை கூட நம் சினிமா பாடல் கவிஞர்கள் முன்வைக்காமல் போய் விடுவார்கள். இப்பொழுது கூட கானா உலகநாதனின் கானாபாடல்களை அவ்வப்பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் (கலைஞர் தொலைக்காட்சியில்) பார்த்து மகிழ்கிறேன்.

சென்னை செகுசு பகுதியில் குடிக்க தண்ணீர் இல்லாத காலத்தில் கூட கூவம் நதிக்கரையில் நல்ல தண்ணீர் குளிக்க (குடிக்க அல்ல) கிடைத்தது மிகப் பெரிய ஆச்சரியம். உப்பு தண்ணீர் தான். ஆனால் நான் அங்கே இருந்த மூன்று ஆண்டுகளில் ஒரு முறை கூட தண்ணீர் பஞ்சம் வந்தது இல்லை. குடிக்க கூட மினரல் வாட்டர் வாங்கி விடலாம். குளிக்க தண்ணீர் இல்லையென்றால் என்ன செய்வது ?

கூவம் நதிக்கரை இன்னும் பல அனுபவங்களைக் கொடுத்தது. நாங்கள் இரவு நேரங்களில் அறைக் கதவை திறந்து வைத்து விட்டே படுப்பது வழக்கம். நம்மிடம் என்ன இருக்கிறது எடுத்துப் போக என்ற அலட்சியம் தான். ஆனால் அதற்கு வந்தது ஆப்பு. ஒரு நாள் காலை எழுந்து பார்த்த பொழுது அறையில் இருந்த சில பொருட்கள் மிஸ்ஸிங். என்னடா இது என்று பார்த்தால், ஒரு நண்பனின் பாஸ்போர்ட் இருந்த பை காணாமல் போய் விட்டது. துணிப்பையுடன் சேர்த்து பாஸ்போர்ட் இருந்ததாக கூறினான். அலற ஆரம்பித்து விட்டான். அவன் TCS நிறுவனத்தில் பணிபுரிகிறான். ஆன்சைட்(Onsite) வாய்ப்பிற்காக காத்திருந்தவன். போலீஸ் ஸ்டேஷன் போய் ஒரு புகார் கொடுத்திடலாம் என்று கிளம்பினோம். என்னை துணைக்கு அழைத்துக் கொண்டான். இது வரைக்கும் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் போனதே இல்லை. நாங்கள் போனவுடன் அவன் பதட்டத்துடன் என் அறையில் திருட்டு, பாஸ்போர்ட் காணவில்லை. எப்.ஐ.ஆர் போடணும் என்றான். போலீஸ்காரருக்கு குஷியாகி விட்டது. பாஸ்போர்ட் காணவில்லை, எப்.ஐ.ஆர் என்றவுடன் அவருக்கு பணம் கறக்கும் எண்ணம் தோன்றி விட்டது. எங்களை உட்கார வைத்து நிதானமாக பேசினார். பேச்சு திருட்டு பற்றியே இல்லை. என்ன திருட்டு, எப்படி நடந்தது என எதைப் பற்றியும் இல்லை.

TCSல் வேலை பார்க்கும் நீ, எதற்கு நம்ச்சிவாயபுரத்தில் இருக்கிறாய் என்றார் ? வேலை கிடைப்பதற்கு முன்பு இருந்தே இருக்கிறோம். சிலருக்கு இன்னும் வேலை கிடைக்க வில்லை. ரொம்ப நாளாக இருந்ததால் அப்படியே இருந்து வருகிறோம் என்றோம். நமச்சிவாயபுரத்தில் இருப்பவன் பெரும்பாலும் நமச்சிவாயபுரத்திலேயே மருமகனாகி விடுவான், பார்த்து இருங்கள் என்றார். அவர் கூறியதன் அர்த்தம் அப்பொழுது புரியவில்லை. சில கதைகளை பக்கத்து அறை நண்பர்கள் சென்ன பொழுது தான் புரிந்தது.

கூவம் நதிக்கரை எனக்கு பல அனுபவங்களை கொடுத்தது. இன்று நியூயார்க் நகரில் இருந்தாலும், நீல வண்ணத்துடன் ஓடும் அழகான பல நதிகளை பார்த்தாலும் கூவம் நதிக்கரையும், அதன் வாசனையும், அதன் மக்களும், அந்த நினைவுகளும் எல்லாவற்றையும் விட அதிகளவில் மனதில் நிற்கிறது. பல சமூக அனுபவங்களை, புரிதல்களை எனக்கு வளர்த்துள்ளது. அந்த மனிதர்களிடம் இருக்ககூடிய முரண்பாடுகள், சண்டைகள், சச்சரவுகள், அடிதடிகள் போன்றவை எங்கேயும் காணக்கிடைக்காதவை. மிகவும் தனித்துவமானது. ஒரு புதினத்தை அந்த மக்களின் வாழ்க்கையை வைத்து அழகாக எழுதி விட முடியும். எந்த சினிமாவும் இவர்களின் வாழ்க்கையின் முரண்பாடுகளை இது வரை காட்டவில்லை. மேல்வர்க்கத்தை சினிமா படம் பிடிக்கும் அளவுக்கு இந்த மக்களை தமிழ் சினிமா அணுகவில்லை. இவர்களை கலர்புல்லாக காட்டமுடியாதது தான் காரணமாக இருக்கும். கலர்புல்லாக இல்லாதது தமிழ் சினிமாவாக முடியாதே ?

8 Responses:

ஆ.ஞானசேகரன் said...

நல்ல மலரும் நினைவுகள்... பாராட்டுகள்

வடுவூர் குமார் said...

கூவம் வாசத்தில் இருந்திருந்தாலும் எழுத்தில் அந்த வாசம் இல்லாமல் நன்றாக சொல்லியுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.

காட்டாமணக்கு said...

ஞானசேகரன், வடுவூர் குமார்,

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

கபீஷ் said...

Good write up.

தமிழ்நதி said...

வித்தியாசமானதொரு பதிவு. விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். உங்கள் எழுத்தை முன்பு படித்ததில்லை. கூர்ந்த கவனிப்பு நல்லதொரு பதிவாக வெளிப்பட்டிருக்கிறது. அனுபவங்கள் நம்மைச் செம்மைப்படுத்தும் என்பது மிக உண்மை.

சின்னப் பையன் said...

நல்ல மலரும் நினைவுகள்... பாராட்டுகள்...

Thekkikattan|தெகா said...

மனம் எதனில் லயித்து உள்வாங்குகிறதோ அதுவே சுவைபடுகிறது. பிறிதொரு நாளில் அது நீலம் படித்த ஹட்சன் நதியாகவே இருந்தாலும் ஒட்ட மறுக்கலாம், மனம் கூவத்துடன் லயித்திருந்ததும் ஒரு காரணமோ!

அழகான எழுத்து நடை.

காட்டாமணக்கு said...

தமிழ்நதி, ச்சின்னப் பையன், தெகா,

நன்றி